Thursday, March 14, 2013

நட்பு நாடா இப்படி செய்யும்?


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று (Feb 14, 2013) அதிமுக , திமுக எம்.பி.,க்கள் தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
அதிமுக எம்.பி., தம்பிதுரை பேசுகையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனையை நாம் எழுப்புவதால், தற்போது இலங்கை இந்தியாவுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை மேற்கொள்கிறது. ஆனால் நமது அமைச்சர்கள் இலங்கையை நட்புநாடு என்று கூறுகிறார்கள். ஒரு நட்பு நாடு தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இப்படியா தாக்குதல் நடத்தும் என கேள்வி எழுப்பினார். இதுவரை 800 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றிருப்பதாக புள்ளிவிவரம் கூறுவதாக தெரிவித்தார்.
மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் மக்களவையில் தெரிவித்தார். மீனவர்களை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தது .ஆனால் இன்னும் மீனவர்கள் பாதுகாப்பாக இல்லை. இது தினமும் வாடிக்கையாகிவிட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கவே தயங்குகின்றனர். மீனவர்கள் நாட்டை கைப்பற்ற போகவில்லை அவர்கள் மீன்பிடிக்க மட்டுமே செல்கின்றனர். அவர்களுக்குச் சர்வதேச எல்லை எது என்று தெரிவதில்லை. மீனவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டுள்ளது என்பதே எனது கேள்வி. நமது மீனவர்களை பாதுகாக்க கடற்படை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களவையிலும் அமளி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை இன்று கூடியதும், இலங்கை கடற்படையால் , தமிழக மீனவர்கள் தொடர்ந்து, சிறைப்பிடித்துச் செல்வது குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் வலியுறுத்தினார்.
அதேபோல், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment