Friday, May 31, 2013

Union Government lastly gives green signal for 2 thermal power projects in TN

 மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, எட்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. அது போல், உடன்குடி அனல் மின் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய மின் பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வரும் நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், இரண்டு முக்கிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு, சுற்றுச்ழல் அனுமதி கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை ஒட்டி அமைந்த செய்யூர் பகுதியில், 1995ம் ஆண்டில், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம் அமைக்க, பிரபல பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., களம் இறங்கியது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, தன் "கோல்ப்' விளையாட்டு மைதானம், அந்தத் திட்டத்தால் பாதிப்படையும் என கருதியதால், அந்த அனல் மின் நிலையத்தை, அமைய விடாமல் தடுத்து விட்டது.
கடந்த, 2005ம் ஆண்டு, நாடு முழுவதும், ஐந்து இடங்களில், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்கப் படும் என, மத்திய அரசுஅறிவித்தது. அதில் ஒன்று, தமிழகத்திற்கும் கிடைத்தது. செய்யூர் பகுதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த, 20ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, இந்த திட்டத்திற்கான, ஆவணங்களை, மத்திய மின்சார அமைச்சகம் தயார் செய்து கொண்டிருக்கிறது. திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிவிவரங்களை தொகுத்து அந்த ஆவணம் தயாராகி வருகிறது.தனியார் நிறுவனத்துடன் இணைந்து தான், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, அந்த தனியார் நிறுவனம் எது என்பதை தேர்வு செய்து, தேவையான நிதி விவரங்களை இறுதி செய்து, அதன் பிறகு தான் பிற வேலைகள் ஆரம்பமாகும். இவை எல்லாம் ஒழுங்காக நடைபெற்றாலும் கூட, திட்டத்தை செயல்படுத்த, எப்படியும், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும்.தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை, 4,000 மெகா வாட் என இருக்கும் நிலையில், இதை பூர்த்தி செய்ய, இந்தசெய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆட்சியாளர்கள், ஆர்வமும், வேகமும் காட்டினால் மட்டுமே, இது சாத்தியமாகும்.
உடன்குடிக்கும் "ஓகே':தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படுவதற்கான வகையில், உடன்குடியில், 1,600 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது.திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில், அனல் மின் நிலையம் அமைக்க, கடந்த 2006ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது; அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியமும், "பெல்' நிறுவனமும் இணைந்து, திட்டம் நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.
உடன்குடியில், 800 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகளை அமைப்பது எனவும், 1,600 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும், பாய்லர்களை தயாரித்து அளிக்கும் திருச்சியில் உள்ள, "பெல்' நிறுவனம், கடந்த, ஆறு ஆண்டுகளாக உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து, கடந்தாண்டு, "பெல்' நிறுவனத்தை, தமிழக அரசு நீக்கிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து, தமிழக அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த திட்டத்தை ஆரம்பிக்க தேவையான,சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த, 10ம் தேதி, உடன்குடி அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.
கடலூரில் எப்போது?: மத்திய மின்சாரத்துறை அமைச்சராக, சுஷில்குமார் ஷிண்டே இருந்த போது, தமிழகத்துக்கு மேலும் ஒரு, "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தை கடலூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டம் குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் முறையிட்டனர். 
அப்போது, நிலம் வழங்க மாநில அரசு முன்வந்தால், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தயார் என, கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment