கடந்த ஒருசில நாட்களாக மீடியாக்களின் செய்திப்பசிக்கு தீனி போடும் வேலையை கையில் எடுத்திருக்கிறார் மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி... அவரை பற்றி என்ன செய்தி உலாவிக்கொண்டிருக்கிறது? என்பதை பார்ப்பதற்கு முன்னால், அவருடைய அரசியல் பாதையை சுருக்கமாக பார்த்திடலாம்....மத்திய பிரதேச பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒன்பது வருடங்களாக மாநிலத்தில் நிதி அமைச்சர் பொறுப்பை கவனித்து வந்தவர், இதுவரை பத்து பட்ஜெட்’களை தாக்கல் செய்த ராகவ்ஜியின் நிர்வாக திறமை பலரும் பாராட்டும் வகையில் அமைந்த ஒன்று.... இப்போது இந்த 79 வயது முதுபெரும் அரசியல்வாதியான ராகவ்ஜி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு “ஓரினசேர்க்கை”யில் ஈடுபட்டார் என்பதுதான்...
ராகவ்ஜியின் வீட்டில் வேலையாளாக பணிபுரிந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது... அதாவது “ராகவ்ஜி , அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி தன்னை மூன்று வருடங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்தி வந்தார்” என்பதுதான் அந்த புகாரின் சாராம்சம்... இப்படி புகார் கொடுத்த ஒரே நாளில், ராகவ்ஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திட கட்சி அழுத்தம் கொடுத்து, ராஜினாமாவும் செய்தார்.... அடுத்த நாளிலே, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ராகவ்ஜி விடுவிக்கப்பட்டு, கட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.... வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டும் விட்டார்....
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பதவியில் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர் மீது குற்றம்சாட்டப்பட்ட மூன்றே நாட்களில் இவ்வளவும் நடந்தது ராகவ்ஜி விஷயத்தில் மட்டும்தான்
நடந்துள்ளது.... ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ராகவ்ஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு மட்டும்தான் இதுவரை நடந்துள்ளது, இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை... அதற்குள்ளாக அவருடைய ஒன்பது வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது இந்த நாடு....
குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் பதவி விலகனும்னு சொன்னா, இந்த நாட்டில் 90%அரசியல்வாதிகள் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கணும், பெரும்பாலான பதவிகள் காலியாக இருக்கணும்... சரி, இந்த வழக்கு எப்படி பார்க்கப்படுகிறது?... பாலியல் விவகாரம் என்பதால் இந்த கடுமையான நடவடிக்கையா? என்று பார்த்தால் அதுவும் கிடையாது... சூரியநெல்லி விவகாரத்தில் குரியன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்காக அவர், குற்றம் சாட்டப்பட்ட உடனேயே பதவி விலகினாரா?, இதற்கு முன்னால் இதே பாஜகவில் முக்கிய தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, சிடி ஆதாரம் வரை சிக்கிய பின்பு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனரா?... இல்லை... அப்படியானால் இது என்ன ஸ்பெஷல் வழக்கு?... இதை பாலியல் வழக்காக அவர்கள் பார்க்கவில்லை, கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டதான ஒரு குற்றமாக பார்க்கவில்லை... அதையும் மீறி “ஓரினசேர்க்கை” என்கிற ரீதியில் இது பார்க்கப்படுகிறது....
வடநாட்டு மீடியா முதல் நம் ஊர் “வினவு” வரை இந்த செயலை “இயற்கைக்கு புறம்பான” பாலியல் அத்துமீறலாக செய்தி வெளியிடுகிறார்கள்... ராகவ்ஜி உறவு கொண்டது மனிதனுடன்தானே? அப்புறம் எப்படி அது இயற்கைக்கு புறம்பானதாக அமையும்... சட்டரீதியாக சட்டப்பிரிவு 377ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் ஊடகங்கள்.... உயர்நீதிமன்றத்தால் இந்த சட்டப்பிரிவு திருத்தப்படவேண்டும் என்று சொல்லி, இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சட்டப்பிரிவை உங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு செயல்படுவது சரியா?...
ஒரு குழந்தை பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டபோதோ, ஒரு இளம்பெண் நான்கைந்து ஆண்களால் சீரழிக்கப்பட்டபோதோ இந்த ஊடகங்கள் “இயற்கைக்கு புறம்பான” என்கிற வாதத்தை முன்வைக்கவில்லை... அப்படியானால், குழந்தை மீதான பாலியல் வன்முறையையும், கேங் ரேப் போன்ற விஷயத்தையும் இவர்கள் “இயற்கை” என்று அங்கீகரிக்கிரார்களா?... அதைவிட ஒருபால் ஈர்ப்பை இவர்கள் கொடுமையான விஷயமாக பார்க்கிறார்களா?....
ராகவ்ஜி விவகாரம் ஒரு தவறான வழிமுறையை இந்த நாட்டில் உருவாக்கக்கூடும்.... “ஒருவர் மீது ஓரின சேர்க்கை என்கிற புகார் கொடுத்தால், விசாரிக்கும் முன்பே அவர் தண்டனையை அடையக்கூடும்... பதவி பறிக்கப்படும், மீடியாக்களில் முகம் கிழிக்கப்படும்” என்ற ஒரு நிலைமை உண்டாகிவிடும்... இது நாளடைவில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, பல அரசியல் தலைவர்களையும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கவைக்கும் நிலைமையை உண்டாக்கிடும்....
ஒன்றே ஒன்று நான் கேட்கிறேன்... “ஒருவேளை ராகவ்ஜி மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது, அரசியல் பழிவாங்கும் விதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது” என்று வழக்கில் தீர்ப்பு வந்தால், இப்போது அவர் மீது சேற்றை வாரி இறைக்கும் இந்த ஊடகம் அவர் மனஉளைச்சலுக்கு பொறுப்பேற்குமா? அவரை நீக்கி தங்கள் கட்சியை புனிதப்படுத்தியதாக நினைக்கும் பாஜக தலைமை ராகவ்ஜியின் மனக்குமுறலுக்கு விடை சொல்லுமா?....
ஒருவேளை ராகவ்ஜி தன் வீட்டு வேலையாளை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தி உறவுகொண்டது உண்மை என்றால், அது நிச்சயம் குற்றம்தான் என்பதுதான் என் கருத்தும்... ஆனால், ஒரு பெண்ணுடன் பலவந்தமாக உறவுகொண்ட குற்றத்திற்கு நிகராகத்தான் இந்த குற்றத்தையும் பார்க்க வேண்டும்... இது ஸ்பெஷல் பாலியல் குற்றமாக இந்த மீடியா திரிப்பது முட்டாள்த்தனம்....
கடைசியாக சில கேள்விகளோடு என் கருத்தை நிறைவு செய்கிறேன்....
1. மூன்று வருடங்களாக ராகவ்ஜி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று சொல்லும் வேலையாள் திடீரென புரட்சியாளனாக மாறியது எப்படி? அதற்கு பின்னால் செயல்படும் அரசியல் என்ன?
2. இந்த குற்றம் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த மீடியாவும், பாஜகவும் ராகவ்ஜிக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
3. பாலியல் ரீதியாக நிற்பந்தப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதா? அல்லது, ஓரின சேர்க்கை என்ற ரீதியில் அவர் மீது இவ்வளவு அழுத்தம் திணிக்கப்படுகிறதா?.....
சமூகம் ஒரு விஷயத்தை தவறாக புரிந்துகொண்டால், அதை சட்டம் மாற்றிட வேண்டும்... சட்டம் தவறான பாதையில் சென்றால், அதை சுட்டிக்காட்ட வேண்டியது இந்த ஊடகங்கள்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு விஷயத்தில் இந்த சமூகம், சட்டம், ஊடகங்கள் என்று அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வது வேதனையான உண்மை.... இந்த “ஹோமொபோபிக்” நிலைமை மாறும்வரை இன்னும் எத்தனை அரசியல் தலைவர்கள் “ராகவ்ஜி”யாக ஆக்கப்படுவார்களோ? தெரியவில்லை.....
(Msg came in my mail id)
No comments:
Post a Comment