(குமுதம் ரிப்போர்ட்டர் நாளிதழில்
வெளிவந்தது.....)
IAS, IPS, பதவிகளுக்கான சிவில்
சர்வீஸ் தேர்வு எழுத வேண்டுமானால் முறையான பயிற்சி அவசியம். இதற்கென அரசு தரப்பில்
இலவச பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் பணம்
கொழிப்பதால் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கின்றன தனியார் பயிற்சி
மையங்கள். சமீப காலமாக தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர்வது அதிகரித்து வரும்
நிலையில், பயிற்சி மையங்களில் தரம் குறைந்து பணம், பப்ளிசிட்டி, பாலிடிக்ஸ்
புகுந்திருப்பதாகக் குமுறுகிறார்கள் IAS, IPS கனவில் இருப்பவர்கள்.
கடந்தாண்டு
சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி, IRS பணி கிடைத்திருக்கம் இளைஞர் ஒருவர் இதுபோன்ற பயிற்சி
மையங்கள் எப்படியெல்லாம் கோல்மால் வேலைகளைச் செய்கின்றன என்பதை புட்டுப் புட்டு
வைக்கிறார்.
இந்தியா
முழுவதும் வருசத்துக்கு அதிகபட்சம் ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுறாங்க.
தமிழ்நாட்டுல இருந்து தோராயமா 100 பேர் இருக்கலாம். ஆனா ரிசல்ட் வர்றப்ப, ஒவ்வொரு
இன்ஸ்டிடியூட சார்பாகவும் 50 பேர், 60 பேர் பாஸான விளம்பரம் தர்றாங்க. தனியார்
பயிற்சி மையங்கள் இப்படிக் கொடுக்கிற புள்ளி விவரங்களைக் கூட்டிப் பார்த்தால் அதன்
எண்ணிக்கை தமிழ்நாட்டுல இருந்தே 500 பேரைத் தாண்டும். இதுதான் பக்கா பிசினஸ்
ஐடியா. ஒரு இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து ஒரு மாசம் படிச்ச ஒருத்தர், அங்க சரியா
சொல்லிக் கொடுக்கலை-ன்னு இன்னொரு இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிச்சு பாஸாகிட்டா,
அவரோட வெற்றியை ரெண்டு மையங்களுமே உரிமை கொண்டாடுறாங்க. அடுத்து, டெல்லியில்
படிச்சவங்க பெயரையும் சேர்த்துக்கறாங்க. இது ஒரு விஷயமான்னு கேக்கலாம், இதுல
இருந்துதான் அவங்களோட பணம் பிடுங்கும் வேலை ஆரம்பிக்குது. ‘ஜெயித்த மாணவர்கள்’னு பெரிய லிஸ்ட்டைக் காட்டி
விளம்பரம் கொடுக்கிறப்ப, IAS ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிக அளவுல இங்க வந்து சேருவாங்க. ஒரு
இன்ஸ்டிடியூட்ல 100 பேர் சேர்றாங்கண்ணா பிரிலிமினரி, மெயின், இண்டர்வியூ முடிச்சு
செலக்ட் ஆகிறவங்க 15 முதல் 20 பேர்தான் இருக்கும். அவங்களோட வெற்றியில 10%-தான்
இன்ஸ்டிடியூட்டோட பங்கு. மீதி முழுக்க முழுக்க அவங்களோட சொந்த உழைப்புதான். இந்த
10% பங்களிப்பைதான் பிரமாண்டமா காட்டி, அதிகக் கட்டணம் வசூலிச்சு, காசை
அள்ளுகினறன் தனியார் பயிற்சி மையங்கள். மூன்று நிலைக்கும் சேர்த்து சில
நிறுவனங்கள் ஒன்றரை லட்சம் வரை பயிற்சிக் கட்டணமாக வாங்குகின்றன. புத்தகங்களை
நாமதான் வாங்கிக்கணும். பணம் கொட்டுறதால அனுபவம் வாய்ந்தவங்க இன்ஸ்டிடியூட்
ஆரம்பிச்சது போய் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் புள்ளிகளும்கூட
இதில் வந்துட்டாங்க. இவங்களோட பிசினஸ் போட்டியில் பாதிக்கப்படுறது, அப்பாவி
இளைஞர்கள் தான்.
சில
தனியார் பயிற்சி மையங்களைத் தொடர்பு கொண்டு பேசினோம், “எக்ஸாம் டிப்ஸ் என்றால்
பேசலாம்; மற்ற விஷயங்களைப் பேச விரும்பவில்லை” என எந்த கேள்விக்கும்
பதில் அளிக்க மறுத்து விட்டார்கள்.
ரிசல்ட்
திருட்டைத் தாண்டி தங்களிடம் படித்து தேர்வாகிய பெரிய பதவிகளில் அமர்பவர்களை
மட்டுமின்றி, சில நேரங்களில் கவர்னரயே அழைத்து வந்து விழாக்கள் நடத்தி அதன்
மூலம் இந்த நிறுவனங்கள் விளம்பரம் தேடிக்
கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் தொடங்கப்பட்டு போட்டித் தேர்வு லைனில்
எந்த அனுபவமுமில்லாத ஒரு பயிற்சி மையம் மூன்றே மாதத்தில் அறுபது லட்சம்
வரைக்கும் விளம்பரத்துக்குச் செலவு செய்திருக்கிறதாம்.
தற்போது
சென்னையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இவற்றில்
அண்ணா நகரைச் சுற்றியே 50 மையங்கள் உள்ளன. பயிற்சி தருபவர்கள், வகுப்பறை வசதி,
ஓரளவு ரிசல்ட் எனப் பார்த்தால், மூன்று அல்லது நான்கு மையங்களே தரமானவை என்று
சொல்லப்படுகிறது.
(குமுதம் ரிப்போர்ட்டர் நாளிதழில் வெளிவந்தது.....)
No comments:
Post a Comment