Saturday, December 29, 2012

'வேளாண்மையில் கவனம் செலுத்தக் கூடாது'


‘‘வேளாண்மைத் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தக் கூடாது. விவசாயம் சாராத பிற துறைகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம், வேளாண்மைத் துறையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வர வேண்டும். குறைந்த அளவு மக்கள்,  வேளாண்மைத் துறையில் ஈடுபட்டால்தான், வேளாண்மைத் துறையில் சராசரி தனிநபர் வருமானம் அதிகரிக்கும்''
-இப்படி ஒரு 'அருமை'யான உரையை, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் நிகழ்த்தி, வந்திருந்த முதலமைச்சர்கள் அனைவரையும் புல்லரிக்க வைத்துவிட்டார்... நம்முடைய நாட்டின் மூத்த 'பொருளாதார புலி' மன்மோகன் சிங்!
ம்... சொல்வதை, திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக, அமெரிக்காவின் பிடியிலிருக்கும் மன்மோகன் சிங் வேறு எப்படி பேசுவார்?
அமெரிக்காவில், ஆயிரம் ஏக்கர் வைத்திருப்பவர்கள்கூட சிறுவிவசாயிகள்தான். ஐந்தாயிரம் ஏக்கர்... பத்தாயிரம் ஏக்கர் என்று வைத்திருப்பவர்கள்தான் விவசாயிகள். மற்றவர்கள் எல்லாருமே 'வொயிட் காலர் ஜாப்' எனப்படும் வெவ்வேறு வேலைகளில் இருப்பவர்கள்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள்... இஷ்டம் போல ஊதாரித்தனமாக செலவழிப்பதும்... பசிக்காவிட்டாலும்கூட கண்டதையும் தின்று கொழுப்பதும்தான் வேலையாகவே வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டு சூழலும் அவர்களை அப்படித்தான் வளர்த்தெடுக்கிறது. ஆனால், இப்போதுதான், அந்த நாட்டின் பொருளாதார சாயம் வெளுக்க ஆரம்பித்து, பலரும் வீதிகளில் டென்ட் அடித்து குடியிருக்க ஆரம்பித்துள்ளனர். சொல்லப்போனால்... பேன்ட், ஷர்ட் போட்ட பிச்சைக்காரர்களாக பலரும் மாறிப் போயிருக்கிறார்கள். காரணம் ... தேவையிருக்கிறதோ... இல்லையோ... எதைப் பார்த்தாலும் வாங்கிப்போட வேண்டும் என்கிற தறிகெட்ட நுகர்வு கலாச்சாரம்தான்! உலகின் பல நாடுகளிலும் இதுதான் நிதர்சனம்.
இதையெல்லாம் மீறி, இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு நிலைத்து நிற்பதற்கு காரணமே... இங்கே பாரம்பரியமாக இருக்கும் சேமிப்பு முறைகளும்... விவசாயம் உள்ளிட்ட கிராமப்புற தொழில்களும் நிலைத்திருப்பதுதான்.
ஆனால், உலகமயமாக்கல் என்கிற பெயரில், ஏற்கெனவே, தொழில் மற்றும் வியாபாரத்தையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து, இந்தியாவை மறுபடியும் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைத்துக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் அரசு... கடைசியாக விவசாயத்திலும் கைவைக்கத் தீர்மானித்துவிட்டது. 
ஏற்கெனவே விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் விவசாயிகள். கொஞ்ச, நஞ்ச நிலங்களை வைத்திருக்கும் சிறு-குறு விவசாயிகளும் அப்படி அப்படியே நிலங்களைப் போட்டு வைத்துவிட்டு, நகர்ப்புறங்களில் கூலிக்காரர்களாக பிளாட்பார வாழ்க்கைக்கு பழகிக் கொண்டுள்ளனர். தற்போது, மிச்ச மீதி இப்பவர்களையும், விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றிவிட்டு, மொத்தமாக வெள்ளைக்காரனுக்கு நிலங்களை தாரை வார்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் 'நாகரிக கோமாளி' மன்மோகன் சிங்!
ம்... இந்தியாவை அமெரிக்கா போல மாற்ற ஆசைப்படுகிறார் மன்மோகன் சிங்.... அந்த நாட்டைப் போலவே, கார்களும் கட்டடங்களும் செல்போன்களும் உடல்பெருத்த மனிதர்களும், வந்தால் மட்டும் போதுமா... நம்முடைய நகரங்களிலும் பேன்ட்-ஷர்ட் போட்ட பிச்சைக்காரர்கள் அலைந்தால்தானே பார்ப்பதற்கு அச்சு அசலாக அமெரிக்கா போல இருக்கும்!

No comments:

Post a Comment