Sunday, June 16, 2013

தர்ம சங்கடத்தில் தே.மு.தி.க.

 நடக்க இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பில் ஐந்து வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டனர். சிக்கலே இல்லாமல் நான்கு வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் மற்றும் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஐந்தாவது வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்து விட முடியும் என்கிற உறுதியுடன் இருக்கிறது ஆளும்கட்சித் தரப்பு.
பிரச்னை அதுவல்ல; மீதமுள்ள ஒரு உறுப்பினர் இடதுசாரிகள் சார்பாக நிறுத்தப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கோ, தே.மு.தி.க.வுக்கோ, தி.மு.க.வுக்கோ கிடைக்குமானால், அ.தி.மு.க. அதுபற்றி கவலைப்படப் போவதில்லை. தி.மு.க.வும், தே.மு.தி.க.வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்துமானால் நிலைமை என்ன? இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் போட்டியிடத் தீர்மானித்து, தேர்தலைத் தே.மு.தி.க. புறக்கணிக்க முற்பட்டால் என்ன நடக்கும்? தே.மு.தி.க. உறுப்பினர்களின் 6 வாக்குகள் தி.மு.க.வுக்கும், மீதமுள்ள 16 வாக்குகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தரப்பட்டு, அந்த இரண்டு கட்சிகளுமே வெற்றி பெறுமானால்?
ஏழு பேர் களமிறங்கும் நிலைமை ஏற்பட்டால், ஆளும் அ.தி.மு.க.வின் ஐந்தாவது உறுப்பினரின் வெற்றி கேள்விக்குறியாக வாய்ப்பு இருக்கிறது. இதை ஒருநாளும் ஆளும்கட்சி அனுமதிக்காது என்று சர்வ நிச்சயமாக நம்பலாம். இதுபோல, பல குழப்பமான கேள்விகளை நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் எழுப்புகிறது.
முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஐந்து பேரை அறிவிக்கும்போதே, ஆறாவது இடத்தைத் தனது ஆதரவு பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன்தான் செயல்பட்டார் என்று கருதுபவர்கள் உண்டு. "ஆறாவது இடம் யாருக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை, அ.தி.மு.க.வுக்கு ஐந்து இடங்கள் கிடைக்க வேண்டும்' என்கிற எண்ணத்துடன்தான் அவர் செயல்படுகிறார் என்று கூறுவோரும் உண்டு.
தி.மு.க. என்ன தைரியத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது என்பதே அரசியல் நோக்கர்களுக்குப் புதிராக இருக்கிறது. வெற்றியை உறுதிப்படுத்த 34 உறுப்பினர்கள் தேவை. தி.மு.க.வின் உறுப்பினர்கள் 23 மட்டுமே. காங்கிரஸின் ஐந்து உறுப்பினர்களும், புதிய தமிழகத்தின் 2 உறுப்பினர்களும், பா.ம.க.வின் மூன்று உறுப்பினர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தாலும்கூட தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றிபெற மேலும் ஒரு உறுப்பினரின் வாக்கு தேவைப்படுகிறது.
காங்கிரஸ் உறுப்பினர்களில் மூன்று பேர் அ.தி.மு.க.வை ஆதரிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பா.ம.க. தனது ஆதரவு நிலையை இன்னும் தெரிவிக்கவில்லை. புதிய தமிழகமும் உறுதியாக ஆதரிக்குமா என்பது தெரியாத நிலைமை. தே.மு.தி.க.வின் ஆதரவை எதிர்பார்த்து கனிமொழியைத் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், பிறகு ஏன் தே.மு.தி.க. சார்பில் வேட்பு மனு வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
இந்தியக் கம்யூனிஸ்டுகள் மத்தியில் தேர்தல் களத்தில் நிற்பதா வேண்டாமா என்பதில் இருவேறு சிந்தனைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்தியத் தலைமை மீண்டும் டி. ராஜாவையே மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க விரும்புகிறது என்பதாலேயே, மாநிலத் தலைமை கோதாவில் இறங்க முட்டுக்கட்டை போடுகிறது என்றுகூடப் பரவலாகப் பேசப்படுகிறது. உறுதியான வெற்றி வாய்ப்பில்லாமல் போட்டி போட வேண்டாம் என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையில் ஒரு பகுதியினர்.
Ø       தே.மு.தி.க. தேர்தலைப் புறக்கணிக்குமேயானால், மாநிலங்களவைத் தேர்தலுக்கான சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அதிகரித்துவிடும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், அ.தி.மு.க.வின் ஆதரவுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
Ø       தே.மு.தி.க. தனது ஆதரவை இடதுசாரிகளுக்கு அளிக்க முடிவெடுத்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
இதெல்லாம் தெரிந்தும், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு சாரார் கூறுவதன் பின்னணியில் சுயநலம் இருக்கிறதோ என்கிற ஐயப்பாடும் எழுகிறது. இப்படிப்பட்ட சூழலில், தே.மு.தி.க. என்ன செய்யப் போகிறது என்பதுதான் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படும் கேள்வி. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறும் பலம் தே.மு.தி.க.வுக்கு இல்லை. தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தால், கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டு பல உறுப்பினர்கள் அதிருப்தியாளர்களாக விலைபேசப்படும் ஆபத்தான சூழலும் காணப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.கவை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால், அது தே.மு.தி.கவின் அடித்தளத்துக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது.
""தே.மு.தி.க., தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு அப்பால், அ.தி.மு.க. கட்சியின் தலைவியாக அவர் பிரச்னையை அணுக முற்பட்டிருக்கிறார். அ.தி.மு.கவுக்குப் போட்டியாக, எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியைத் தே.மு.தி.க. குறிவைக்கிறது. தன்னைக் கருப்பு எம்.ஜி.ஆர். என்றும், எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் விஜயகாந்த் வர்ணித்துக் கொள்கிறார். அவர் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துவிட்டால், பிறகு எம்.ஜி.ஆர். வாக்கு வங்கிக்கு அவர் போட்டி போட முடியாது. கருணாநிதியின் நண்பராகிவிட்ட யாரையுமே எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தி.மு.கவுக்கு, தே.மு.தி.க. ஆதரவு அளித்தால், அடுத்த மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி கணிசமான சரிவை எதிர்கொள்ள வேண்டி வரும். அது தி.மு.க. கூட்டணியை பலவீனமாக்கும். முதல்வர் போடும் கணக்கு இதுதான்'' - இப்போது தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் எம்.ஜி.ஆர். விசுவாசியின் கருத்து இது.
தே.மு.தி.க. உறுப்பினர்களில் மேலும் சிலர் அ.தி.மு.க.வுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிகிறது. இது போதாதென்று, தி.மு.க.வும் சரி, ஒருபுறம் வெளிப்படையாகத் தே.மு.தி.க.வின் ஆதரவைக் கோரும் அதேவேளையில், ரகசியமாக அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைபேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணித்தாலும் சரி, போட்டியிட்டாலும் சரி, தி.மு.க.வை ஆதரித்தாலும் சரி, தே.மு.தி.க.வில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வ உறுப்பினர்களைவிட அதிகமாகும் வாய்ப்புதான் அதிகமாகத் தெரிகிறது.
தே.மு.தி.கவுக்கு இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. ஏற்கெனவே ஏழு உறுப்பினர்கள் அதிருப்தியாளர்களாகி அ.தி.மு.க. ஆதரவு நிலை எடுத்திருக்கிறார்கள். ஆறு பேர் சட்டப்பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ""இவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான எந்தவித உரிமையும் கோர முடியாது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இவர்களைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிப்பார்களா என்பதே சந்தேகம்தான். அதை எதிர்த்து வழக்கு வேண்டுமானால் தொடரலாம். எப்போது வழக்கு முடிந்து, எப்போது தீர்ப்பு வெளியாகி... அதற்குள் அந்த உறுப்பினர்களின் பதவிக் காலமே முடிந்துவிடும்.
மாநிலங்களவைத் தேர்தலில் கொறடாவுக்கு அதிகாரம் கிடையாது. போதாக்குறைக்கு, தே.மு.தி.கவின் கொறடாவே தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, மாற்று கொறடா தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவது யார்? நீக்கம் செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களையும் அகற்றிவிட்டால், தே.மு.தி.க.வின் அதிகாரபூர்வ பலம் வெறும் 16 மட்டுமே!
""மக்களவைத் தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு, தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் மாற்றாக, தனியாக முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம். தேர்தலைப் புறக்கணிப்பதைவிட, இடதுசாரிகள் நின்றால் ஆதரவு அளிப்பது என்று நாம் முடிவெடுப்பதன் மூலம், கட்சியில் ஏற்பட இருக்கும் பிளவையும் தடுக்க முடியும். "ஒட்டு தி.மு.க.' என்கிற விமர்சனத்துக்கு ஆளாகாமல் தப்பவும் முடியும்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்குத் தரப்பட்ட யோசனைகளை அவர் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள், தி.மு.க. உறவை விரும்பாத தே.மு.தி.கவினர் பலர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் போனால், அதனால் லாபம் தி.மு.க.வுக்காகத்தான் இருக்கும். அ.தி.மு.க.வின் ஐந்து உறுப்பினர்களும், இடதுசாரிகளின் ஆதரவும் இருந்தால் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். தே.மு.தி.க. உறுப்பினர்கள் சிலர் விலை பேசப்பட்டு தி.மு.க. வேட்பாளர் கனிமொழி ஆறாவது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இது தெரிந்துதான், தி.மு.க.வும் துணிந்து கனிமொழியை நிறுத்தி இருக்கிறதோ என்று கருத வேண்டியிருக்கிறது.
தே.மு.தி.கவின் நிலைமைதான் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது.
(1)                                 தி.மு.கவை ஆதரித்தால், அதன் பிறகு எம்.ஜி.ஆர். வாக்கு வங்கியை நினைத்துப் பார்க்க முடியாது.
(2)                                 தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.
(3)                                 தேர்தலைப் புறக்கணித்தால், இருக்கும் பலத்தையும் இழக்க நேரிடும்!

என்ன செய்யப் போகிறார் விஜயகாந்த்?


No comments:

Post a Comment