"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டுவரக் கூடாது' என, ஐ.மு., கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், "பிரதமரை விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்' என, தி.மு.க., அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால், ஐ.மு., கூட்டணிக்குள், லோக்பால் மசோதாவை மையமாக வைத்து பிளவுகள் தோன்றியுள்ளன. அன்னா ஹசாரே குழுவுக்கும், மத்திய அமைச்சர்கள் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கடைசி கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தோல்வியடைந்தது. "அரசு தயாரித்துள்ள வலுவில்லாத ஒரு லோக்பால் வரைவு மசோதாவை ஏற்க முடியாது' என கூறி, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பது உறுதி என, ஹசாரேயும் அறிவித்து விட்டார்.லோக்பால் வரைவு மசோதா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், முழு தோல்வியில் முடிந்து விட்டதை அடுத்து, அரசு நேற்று முன்தினம் இரவு அதிரடியாக ஐ.மு., கூட்டணியின் ஆலோசனை கூட்டம் கூடுவதாக அறிவித்தது. இதுவரை முக்கிய முடிவுகள் எதற்குமே இதுபோன்ற கூட்டத்தை கூட்டாமல், சோனியா தலைமையிலான உயர்மட்ட கமிட்டியில் வைத்தே பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.சோனியா தலைமையிலான இந்தகமிட்டியில், பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், அந்தோணி மற்றும் அகமது படேல் ஆகியோர் மட்டுமே அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்பர். இந்த சூழ்நிலையில், லோக்பால் விவகாரத்தில் ஐ.மு., கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என காட்டுவதற்காக, இக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கூட்டம் கூடிய பின் நிலைமை மாறிவிட்டது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தன் மகளை பார்ப்பதற்காக டில்லி வந்து தங்கியிருந்தாலும் கூட, இக்கூட்டத்திற்கு போகாமல், டி.ஆர்.பாலுவை அனுப்பி வைத்தார். வழக்கம் போல தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தனர்."பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர தேவையில்லை. பிரதமர் பதவி உயர்ந்தது. இப்பதவிக்கு எந்த விதத்திலும் களங்கம் வந்துவிட கூடாது' என, திரிணமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர். தவிர மாநில அளவில் அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பும் தேவையில்லை என்றும் கூறினர்.ஆனால், தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு தன் கருத்துக்களை தெரிவித்த போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் பேசியதாவது: பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இன்றைக்கு மன்மோகன் சிங் போன்ற நேர்மையானவர்கள் பதவியில் இருக்கலாம். நேர்மையானவர்கள் தான் இந்த பதவியில் அமருவர் என, எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. நாளைக்கு வேறு யாராவது பிரச்னைக்குரிய நபர்கள் இந்த பதவியில் அமர நேரிடும். எதிர் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.இன்றைய சூழ்நிலையை வைத்து மட்டுமே, இப்போதைய பிரச்னையை பார்க்க கூடாது. இன்றைக்கு உள்ளவை எல்லாமே நிரந்தரமாக இருக்கும் என நினைத்து விட கூடாது. லோக்பால் சட்டம் நிரந்தரமானது. எனவே, எதிர் காலத்தை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியை இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதே சரி. பிரதமர் பதவி என்பது அதிகாரம்மிக்கதோடு மட்டுமல்லாது; பொறுப்பு வாய்ந்தது. எனவே, அந்த பதவியும் பதில் சொல்ல கடமைப்பட்டது என்றே மக்கள் நினைக்கின்றனர்.மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பு கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கூட மாநில அளவில் லோக் அயுக்தா சட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரே விசாரணைக்குள் ஆஜராகலாம் என்றிருக்கும் போது, பிரதமர் பதவியில் இருப்பவர்களை மட்டும் விதிவிலக்காக பார்க்க தேவையில்லை. அதேபோல சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளையும் கட்டாயம் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
தி.மு.க.,வின் இந்த திடீர் நிலைப்பாட்டால், லோக்பால் மசோதா பிரச்னையில் ஐ.மு., கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பார்லிமென்டிலோ அல்லது அனைத்து கட்சி கூட்டத்திலோ இதே கருத்தை பகிரங்கமாக ஐ.மு., கூட்டணிக்கு எதிராக தி.மு.க., வெளிப்படுத்தினால், நிலைமை மேலும் சிக்கலாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிரடிக்கு காரணம் என்ன?
லோக்பால் மசோதா விவகாரத்தில், ஐ.மு., கூட்டணியின் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க., முரண்பட்டு நிற்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ் கைவிட்டு விட்டதை தி.மு.க., மன்னிக்க தயாராக இல்லை.அதேபோல, இதே விவகாரத்தில் நீதித்துறையும், தி.மு.க.,வை உலுக்கி எடுத்து வருவதையும் சற்று ஆழமாகவே பார்க்கிறது. இதனால் தான், பிரதமர் பதவியையும், நீதித்துறையும் கண்டிப்பாக லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர அதிரடியாக ஆதரிக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை முழுவதுமாக வஞ்சித்து விட்ட மத்திய அரசுக்கும், காங்கிரசுக்கும் பதிலடி கொடுக்கும் நோக்கில் தான், தி.மு.க.,வின் இந்த திடீர் நிலைப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment