பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..." கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.
திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!
ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!
மொத்தத்தில் "எங்கேயும்... எப்போதும்..." படத்திற்கு நிச்சயம் "வெற்றிகளும்... விருதுகளும்..."
No comments:
Post a Comment