Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18 /9

 

ஜோதியை கிழித்துப்போட்ட காகிதமாக அள்ளிக்கொண்டு நகர்கிறது ஒரு ஆம்புலன்ஸ் ....படத்தின் முதல் காட்சியே , இருக்கையில் சாய்ந்து உட்கார அனுமதிக்காமல்  , வில்லை போல் வளைந்து பார்வையை கூர்தீட்டி "இடி ஒன்று இறங்கபோகிறது , நெஞ்சை திடப்படுத்து " என எச்சரிக்கை செய்தபடி ஜோதியை சுமந்துகொண்டு  ஆம்புலன்ஸ் மருத்துவமனையை சென்றடைகிறது . "என் ஜோதி அப்படி பட்ட பொண்ணு இல்ல சார் , அவள காப்பாத்துங்க " என்று உயிரை அறுக்கும் ஒரு தாயின் ஒப்பாரியோடு  தொடங்குகிறது  "வழக்கு எண் 18 /9  " இன் விசாரணை ......

காலம்  இப்படித்தான் கிழித்துப்போடுகிறது சிலரின் வாழ்க்கையை , ஜோதியின் வாழ்க்கையை போல ...... தாட்சண்யமற்ற  , கொஞ்சமும் ஈரமற்ற  உலகம் - வேலுவை வட இந்தியாவில் முறுக்கு சுற்ற அனுப்புகிறது . சுதந்திர இந்தியாவில் இருக்கிற பகுதியில் கொஞ்சமும் சுதந்திரத்தின் சுவை அறியாத சூழலில் யாக்கையை எரித்து பணம் சம்பாதிக்கும் வேலு !  இறந்த  தாய் தந்தையின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்காத ஈவு இரக்கமற்ற சமுதாயத்தை வெற்றி கொள்ள  முயற்சித்து உதிர்ந்த இறகைப்  போல சென்னையின் தெருவோர குப்பையில்  வந்து விழுகிறான். பரத்தை தான் .!  ஆம் ரோசி ஒரு பரத்தை தான் .புழு நெளியும்அசிங்கங்களை  சுமக்கும் பரத்தை தான் ! கவிச்சி வாடை அடிக்கும் ஈன ஆண்மையினை சுமக்கத்  திராணியாக காலையிலேயே மதுவின் துணை நாடும் பரத்தை தான் . ஆனால் அவளுக்கு யாரை விடவும்  ஈரம் அதிகம் இதயத்தில் .  சென்னையின் தெருவில் மயங்கி விழுந்தால் அவன் குடிகாரன் என்கிற பொது புத்தியில் இருந்து வழுவி  உன்னதமான மானுட நிறம் பூசி உலவும்  பரத்தியவள் .  வேலு செய்த புண்ணியம் , அப்பரத்தையின் வடிவில் ஆட்கொள்ளுகிறது !. ரோசி அக்காவின் பேருதவியோடு தெருவோர கடையில் வேலைக்கு சேரும் வேலுவுக்கு மஞ்சள்  மலர் போல , மாமழை  குளிர் போல வறுமையின் வெம்மைக்கு நடுவில் குறிக்கிடுகிறாள் ஜோதி !

****

மேட்டுக்குடி வர்க்கம் . பணம் என்பது ஒரு பொருட்டில்லாத வர்க்கம் .  பிள்ளைகளை விடவும், பிள்ளைகளுக்காக சேர்க்கப்படுகிற சொத்தே முதன்மையானது என சொத்தை சேர்த்து பிள்ளைகளை தொலைக்கிற வர்க்கம் . இந்த வர்கத்தில் இருக்கிற மேட்டுக்குடி ஊதாரித்  தாய் . அவள் பெற்றெடுத்த,  வயதை மீறத்துடிக்கும்   மாணவன் . அம்மாணவனின்  வலைக்குள் வீழ்ந்து மீண்டெழும் ஒரு மேட்டுக்குடி மாணவி .


****

இந்த இரு வகையான வாழ்க்கை ஒரு புள்ளியில் பார்வையாளனுக்கு வலி மேலிட வந்திணைகிறது.  அந்த இணைப்பை தேர்ந்த திரைக்கதை மூலம் லாவகமாக கையாண்ட பாலாஜி  சக்திவேல் தமிழ் சினிமா இதுவரை வகுத்தளித்த இலக்கணங்களை பாரபட்சமின்றி தகர்த்து தவிடுபொடியாக்கி  பார்வையாளன்  மனதில் ஓங்கி உயர்ந்த இடத்தில் ஆகிருதியோடு  வந்தமர்கிறார் .

இவர் தன் கதைக்கு  கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும்  விதம் என்னை மலைக்க வைக்கிறது . சாமுராய்  படத்தில் தொடங்கி காதல் வழியாக கல்லூரியில் பயணித்து இதோ இந்த வழக்கிலும் அந்நேர்த்தி பளிச்சிடுகிறது. உதாரணத்திற்கு  சாலையோர உணவக முதலாளி முதற்கொண்டு  பஞ்சர் ஒட்டுகிற தொழிலாளி வரை இயக்குனர் பாலாஜி சக்திவேலின்  கதாபாத்திர தேர்விற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு .   ஸ்ரீயும் , மிதுன் முரளியும் , ஊர்மிளா , மனிஷா என்கிற நாயகிகளும் இப்படத்தில் அறிமுகம் என்பதை ஏற்றுகொள்ள மனசு தயங்குகிறது . தன் தாய் தந்தை இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்படுகிற நொடியில் ஸ்ரீ காட்டுகிற முக உணர்ச்சிகள் , "பொருக்கி " என ஸ்ரீயை கடக்கிற பொழுதெல்லாம்  ஜோதி என்கிற ஊர்மிள காட்டுகிற முக பாவனைகளும் , தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்த மிதுனின்  காமவிகாரத்தை கண்டுகொண்ட நொடியில் உடல்  நடுங்கி  பதைபதைக்கிற மனிஷாவின் நடிப்பும் , தற்கால பணம் படைத்த பொறுப்பில்லாத தாய்க்கு பிறந்த  மேட்டுக்குடி  மாணவனை  கண் முன் நிறுத்துகிற மிதுன் என அனைவரது நடிப்பிலும் பத்து படம் செய்த முதிர்ச்சி !

இதில்   குறிப்பிட்டு   சொல்லவேண்டிய   கதாபாத்திரங்கள் இருவர் . கூத்துக் கலைஞனாக வருகிற சிறுவன் சின்னசாமி  வெறுமனே இக்கதையில் திணிக்கப்பட்ட  ஒரு கதாபாத்திரமில்லை . ஒருகாலத்தில் தமிழக கிராமியக்கலைகளில் முதன்மையானதாக  இருந்த  தெருக்கூத்து கலைஞர்களின்  இன்றைய நிலையை  வலியோடு நமக்கு உணர்த்திப்போகிறான் . வேலுவின் கையை பிடித்துக்கொண்டு "நான் கடைசி வரைக்கும் உன் கூட இருப்பன்யா.." என்று உருகும் இடத்தில்......
காவல் துறை ஆய்வாளராக  வருகிற  முத்துராமன்,குறிப்பிட நினைத்த இன்னொருவர் . மிக சாந்தமாக வேலுவை விசாரிக்கத்தொடங்கி , பின்  "சாவடி தான  அடிச்சீங்க , சாவடிக்கல இல்ல " என்று அலுங்காமல் குலுங்காமல் பஞ்சாமிரிதம் சாப்பிட்டுக்கொண்டே    கேட்கும் இடத்தில் , நமக்கு ஏனோ உயிர் அதிர்கிறது .... மிக லாவகமாக தூண்டிலில்  இரையை மாட்டி மீன் பிடிக்கும் கதாபாத்திரத்தில் முத்துராமன் வெளுத்துவாங்கியிருக்கிறார் ....ஒரு நாயை தலையை தடவி வேலை வாங்குவது போல , வேலுவை அவன் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள  வைக்கிற காட்சியில் -  அவர் நரியின் நிறம் !

ஒரு பாட்டு நியுஸ்லாந்தில், ஒரு  பாட்டு இங்கிலாந்தில் , ஒரு பாட்டு ஊட்டியில் , இன்னொரு பாட்டு நாக்கை துருத்திக்கொண்டு பீச்சோரம் போதையில் என்ற வறட்டு தமிழ் சினிமா  கௌரவங்களை   வெடி வைத்து தகர்த்த நெஞ்சுத்தீரத்திர்க்காக தனியாக ஒரு பாராட்டு விழாவே பாலாஜி சக்திவேலுக்கு எடுக்கலாம் . ஒரே பாடல் ,அதுவும் பின்னணி இசையின்றி  படத்தின்  தேவையான இடங்களில் உயிரை அழவைக்கும் ஒரு குரலில் ஒலிப்பது இப்படத்தின் ஆகப்பெரிய பலம் .  அதிலும் "உன் கண்ணக்குழி அழகினில் தான், என் கற்பனையை நான் வளர்த்தேன்" என்ற வரிகளை கடைசியில் பாடும் போது ஜோதியின்  சிதையா முகத்தை  காட்டும் காட்சி உங்களை  பச்சாதாபம் மேலிட அழவைக்கும் சக்தி கொண்டது . பாடாலசிரியர் நா.முத்துகுமாரும் , இசையமைப்பாளர் பிரசன்னாவும்  நிரம்ப பாராட்டுக்குரியவர்கள்.  

இப்படம் முழுக்க ஸ்டில் கேமராவில் எடுக்கப்பட்டதாம் . என்னன்னவோ பெயர்  சொல்லி அழைக்கிற  கேமராக்கள் வந்துவிட்ட காலகட்டத்தில் , ஒரே நேரத்தில் சுழன்று சுழன்று வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கிற கேமராக்கள் வந்துவிட்ட காலகட்டத்தில் விஜய் மில்டன் வெறும் ஸ்டில் கேமராவை வைத்து காட்டி இருக்கிற ஜாலம்  தற்கால ஒளிப்பதிவாளர்களை பொறாமைப்படவைக்கும்."தவமாய் தவமிறுந்து " திரைப்படத்திற்கு பிறகு ,  கன்னம் நனைய  அழுத திரைப்படம் "வழக்கு எண் 18 /9 " . இத்திரைப்படத்தை திரையரங்கில்  சென்று பாருங்கள் . பாலாஜி சக்திவேல் என்கிற சினிமாவை காதலிக்கிற , நான் நினைப்பதை எடுக்க எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை பொறுத்திருந்து செதுக்குவேன் என்று மெனக்கிடுகிற , எண்ணிக்கையில் இல்லை என் உயரம் -  பார்வையாளர்களின் பாராட்டே எனது உயரம் என்று ஆத்மார்த்தமாய் உழைக்கிற பாலாஜி  சக்திவேல்  என்கிற இயக்குனருக்கு நம் பாராட்டை  நாம் வேறெப்படியும் சொல்லி விட முடியாது .

படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைகள் தெரிந்தாலும் , அதை சொல்ல வேண்டிய அவசியம்  இல்லை .  நிச்சயம் குறைகளாக நான் நினைப்பவை நம் ரசனையின்  குறைபாடாக இருக்கலாமேயன்றி , இப்படத்தின் குறைபாடாக இருக்க முடியாது . படத்தின் கடைசி காட்சியில் ஜோதியின் முகம் அழற்சியை தொண்டைக்கு  பரிசளித்தாலும்  .,  "நீ கவலைப்படாத ஜோதி ...நான் இருக்க வரைக்கும் நீ கவலைப்படாத  ஜோதி ..." என தள்ளாடி தள்ளாடி கலங்கி நடக்கிற வேலு என்கிற ஸ்ரீயின்  அந்த உண்மையான காதல் , மனதில் கொஞ்சம் ஆறுதலை தந்தது !ஆனாலும் இது வெறும் படம் என்பதை தாண்டி , படம் முடிந்த  பின்னும் ஜோதிக்காக மனசு  வருந்தி கலங்கியது . திரையரங்கை விட்டு வெளியேறுகையில் "பொறம்போக்கு நல்லாவே இருக்க மாட்டான் " என மனசு மிதுனின் கதாப்பாத்திரத்தை சபிப்பதை தவிர்க்க முடியவில்லை ....

இந்தப்படம் சொல்கிற சேதி  ஒன்றிரண்டல்ல .... உங்கள் பிள்ளைகள் எப்போதும் கைப்பேசியில் புழங்கிகொண்டிருக்கிறார்களா ..? அவர்களை உற்று கவனியுங்கள் பெற்றோர்களே என எச்சரிக்கை மணி அடிக்கிறது இப்படம் .  இன்றைய காலகட்டத்தில் மீசை முளைக்கும் முன்னமே ஆண் பிள்ளைகளுக்கு ஆசை முளைத்து விடுகிறது , எனவே அவர்களை மிகுந்த கவனத்தோடு கையாளவேண்டிய பொறுப்பு  பெற்றோர்களுக்கு இருக்கிறது என்பதையும்  இந்தப்படம் சொல்லாமல் சொல்கிறது . இச்செய்திகள் இந்த காலகட்டத்திற்கு மிகுந்த தேவையாக இருக்கிறது . வகுப்பறையில் சக மாணவனோடு நெருங்கி இருந்த மாணவி, ஆசிரியையோடு  ஓடிப்போன மாணவன் , சித்தப்பனை கொன்று சித்தியோடு உடன் போக்கு போன மாணவன் ,  ஒன்பதாவது படிக்கும் போதே கள்ளக்காதல் என நம் பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் பூஞ்சை  பிடித்து பல்லிளிக்கும் இக்காலகட்டத்தில் , பாலாஜி சக்திவேல் தகுந்த ஒரு படத்தின் மூலம் நமக்கு உரைக்கும் படியான செய்தியை சொல்லி இருக்கிறார் .

balajisakthi

 சூழலாலும் சட்டத்தாலும் வஞ்சிக்கப்பட்ட வழக்கிற்காக , என்னை இவ்விரவில் கிழித்துப்போட்ட வழக்கிற்காக  - படம் முடிந்து வீட்டுக்கு வந்த இரவில் , பாலாஜி சக்திவேலின் கைகளை பிடித்துகொண்டு இரண்டு சொட்டு கண்ணீர் விட வேண்டும் போல் இருந்தது ! 

பாலாஜி சக்திவேல் !!!   "நீங்கள் தற்கால தமிழ் சினிமாவின் தனித்த அடையாளம் " !!!


(downladed from facebook)

1 comment: