Tuesday, November 23, 2010
"புதிய வரலாறு படைத்தார் சோம்தேவ்"
ஆசிய விளையாட்டு டென்னிஸ், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், முதன் முதலாக தங்கம் வென்று, புதிய வரலாறு படைத்தார்.சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் டென்னிசின் பைனல் நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார்.இதன் முதல் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ், அடுத்தடுத்து கேம்களை வென்று முன்னிலை பெற்றார். முடிவில் 6-1 என எளிதாக சோம்தேவ் முதல்செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இஸ்டோமின் பதிலடி தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த செய்த தவறுகள், சோம்தேவுக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து இரண்டாவது செட்டையும் 6-2 என, எளிதாக சோம்தேவ் கைப்பற்றினார்.இறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற சோம்தேவ் தேவ்வர்மன், முதன்முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஏற்கனவே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடன் சேர்ந்து, சோம்தேவ் தங்கம் வென்று இருந்தார். இதற்கு முன் ஆசிய விளையாட்டில் லியாண்டர் பயஸ் (1994), மகேஷ் பூபதி (1998), ஸ்ரீநாத் பிரகலாத் (1998) ஆகியோர் வெண்கலம் மட்டுமே வென்று இருந்தனர்.அதிக பதக்கம்:கடந்த 2006 தோகா ஆசிய போட்டி டென்னிசில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளியுடன் மொத்தம் 4 பதக்கங்கள் பெற்றிருந்தது. இம்முறை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இந்திய டென்னிஸ் அணி சீனா சென்றது. இதனால் ஒருசில பதக்கங்கள் பெறுவதே அதிகம் என்ற நிலையில், சோம்தேவ், சனம் சிங், சானியா மிர்சா போன்ற இளம் வீரர்களின் எழுச்சியால் இந்திய அணி 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று அசத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment