Sunday, November 28, 2010

இலவசமாக கொடுத்துக் கொண்டே இருந்தால்வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்ந்துவிடுமா???

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி வென்றாலும் வென்றது, எங்கு திரும்பினாலும், "அப்படியென்றால், தமிழகத் தேர்தலில் என்ன நடக்கும்?' என்பதே பேச்சாகி விட்டது.
பீகார் தேர்தலுக்கும் தமிழக அரசியலுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், அது சில மறைமுக விளைவுகளை ஏற்படுத்தும். பீகாரில் தர்ம அடி வாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது, தே.மு.தி.க.,வுடன் மூன்றாவது அணி அமைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, தன் கையைச் சுட்டுக்கொள்ளாது. ஒன்று தி.மு.க.,வுடனே தொடர்வது அல்லது அ.தி.மு.க.,வுடன் ஐக்கியமாவது என இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. அந்தத் தைரியத்தில் தான் தி.மு.க., தலைவர் கருணாநிதியும், "சேர்ந்திருக்க வேண்டாமென்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்' என, ஜாடை மாடையாக ஒரு போடு போட்டிருக்கிறார். இதுவரை ஜாதி அரசியலின் உடும்புப் பிடியில் இருந்த பீகார் மக்கள், இரண்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம், அதில் இருந்து தாங்கள் முழுமையாக விடுபட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். அதே தீர்மானத்துக்கு தமிழக மக்களும் வந்தால், ஆச்சரியமான முடிவுகள் ஏற்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பீகார் இருண்ட காலத்தில் இருந்தது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக, வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட்டது. தடி எடுத்தவன் தான் தண்டல்காரன். நடுரோட்டில், துப்பாக்கியைத் தூக்கித் திரிவது சாதாரண நிகழ்ச்சி. இப்போது, எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஐந்து ஆண்டுகளில், 15 ஆண்டு பின்னடைவை ஈடுகட்டிவிட்டது பீகார் அரசு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், குஜராத்துக்கு சவால் விடும் என, தாராளமாக நம்பலாம். ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. இங்குள்ள மக்களின் தன்மைக்கும், அரசியல் சூழ்நிலைக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், தமிழகம், எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை, எல்லாருக்குமே தெரியும். நிலம், காஸ் அடுப்பு, பம்ப் செட், கான்கிரீட் வீடு, "டிவி' என, அடுத்தடுத்து ஏதாவது ஒரு பொருளை இலவசமாக கொடுத்துக் கொண்டே இருந்தால், தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்ந்துவிடுமா என்பதை யோசிக்க வேண்டும். வளர்ச்சி என்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தில் இருக்கிறது. நிலமோ, வீடோ, தங்கள் சொந்த உழைப்பில் வாங்கும் திறன் மக்களிடம் இருந்தால் தான், அது வளர்ச்சியில் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் அரிசி கடத்தலும், மணல் கடத்தலும் நடந்த காலம் போய், இப்போது ஆள்கடத்தலே சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆட்சி ஆரம்பித்த புதிதில், துணை முதல்வர் ஸ்டாலினை மதுரை ரயில் நிலையத்தில் ஒருவர், கத்தியால் குத்த முயன்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, ஏராளமான வழக்குகள் பதிவாகின்றனவே தவிர, அவற்றின் மீதான தீர்வுகள் எட்டப்படுவதில்லை. குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதிலும், தமிழக போலீசார், போதிய வேகம் காட்டுவதில்லை. இதேபோல, துறைச் செயலர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளுக்கான நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. லஞ்சம் என்பது, தலையாரி முதல், தலைமைச் செயலகம் வரை வேரூன்றி விட்டதாக புலம்பல்கள் தொடர்கின்றன. ஆளுங்கட்சியாக தி.மு.க., இருப்பதால் தான் இங்கு அவர்கள் மீது விரல் சுட்டப்படுகிறதே தவிர, எதிர்க்கட்சிகள் அப்பழுக்கற்று இருக்கின்றன என்று அர்த்தமல்ல.
தவிர, தமிழகம் இன்னமும் ஜாதி அரசியலின் பிடியில் தான் இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. ராமதாசும், திருமாவளவனும், கிருஷ்ணசாமியும், கொ.மு.க.,வும் இன்னமும் இங்கு கோலோச்சுகின்றனர். எந்தப் பதவியில் எந்த ஜாதிக்காரர் இருக்கிறார் என்று, முதல்வரே பட்டியலிடுகிறார். குறிப்பிட்ட ஜாதியினருக்கு அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக, நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது. இந்த நிலை நீடிப்பதால், தேர்தல் முடிவுகள், கூட்டணியைப் பொறுத்ததாகத் தான் இருக்குமே தவிர, செயல்பாட்டைப் பொறுத்து அல்ல. பீகாரின் தேர்தல் முடிவுகளுக்கு, நல்லாட்சி, வளர்ச்சிப் பணிகள், சட்டம் - ஒழுங்கு என்பதை எல்லாம் தாண்டி, மக்களின் தீர்க்கமான முடிவு தான் முக்கியமான காரணம். இங்குள்ள வாக்காளர்களிடம், அது இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!

(from Dinamalar newspaper dated on 28.11.2010)

No comments:

Post a Comment