எந்திரன் / ரோபோ பார்த்த எல்லோருமே சொன்ன விஷயம்தான் இது… ஆனால் இப்போது இதே வார்த்தையை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனே கூறியிருப்பதுதான், விசேஷம்!
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம்.
படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர்.
ஐஸ்வர்யா ராய் திரையில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த போதெல்லாம் கிடைக்காத வெற்றியும் புகழும், அவருக்கு ரஜினியுடன் நடித்ததில் கிடைத்திருக்கிறது. இந்த ஜோடியின் வெற்றி இன்று உலகமெங்கும் பெரிதும் பேசப்படுகிறது.
சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் – ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். ரஜினியை கடவுளுக்கு நிகராக மதிப்பவர்.
அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு சற்றும் தயக்கமின்றி அபிஷேக் சொன்னது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்… இவருடன்தான் ஐஸ்வர்யா ராயின் ஜோடிப் பொருத்தம் மிகக் கச்சிதமாக இருந்தது. நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர் (Rajini sir – Aishwarya a dhamaal jodi!)” என்றார். {ரஜினிக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யாதான். இப்போதுதான் புரிகிறது, ரஜினி ஏன் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தனது படங்களின் கதாநாயகியாக்க முயற்சித்தார் என்று!}
No comments:
Post a Comment