Saturday, January 1, 2011

2010-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்!

2010-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்!
 ஆண்டுக்கு ஆண்டு எகிறுது சரக்கு சாம்ராஜ்யம். 2010-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாள் டாஸ்மாக் மது விற்பனை 47 கோடி என்பது அரசின் ஜாலிலோ புள்ளிவிவரம். இது 2009 புத்தாண்டு தினத்தைவிட 10 சதவிகிதம் அதிகம். சென்னையில் மட்டும் 7 கோடிக்கு சல்பேட்டா சேல்ஸ். இதுக்கும் தனி ட்ரீட் கேப்பாய்ங்களே!

 செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஃபேர்வெல். கடற்கரை காமராஜர் சாலையில் கம்பீரமாக நிற்கும் கோட்டையில், தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் கூட்டம் ஜனவரி 12-ம் தேதி நடந்தது. மத்திய ராணுவத் துறைக்கு உரிமையானது இந்தக் கோட்டை. சென்னை அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமான புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் உருவாகிறது. கோட்டையில் கருணாநிதி ஆற்றிய பிரிவு உரை, தமிழக அரசியல் சரித்திரத்தின் உருக்கமான ஆட்டோகிராஃப்!

 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்’ மூலம்,  தமிழகம் முழுவதும் 21 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்தார்கள். இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் முடிவடையும் நிலையில்! இன்னும் 6 ஆண்டில் 18 லட்சம் பேருக்கும் படிப்படியாகக் கட்டித் தரப்படும் என்று தேர்தல் தேன் தடவி வைத்திருக்கிறார் முதல்வர்!

அ.தி.மு.க-வின் முக்கிய விக்கெட்டுகள் தி.மு.க. பக்கம் விழுந்தன. கடலாடி சத்தியமூர்த்தி. முத்துசாமி, சின்னச்சாமி என ஸ்டெம்புகள் சிதறின. 'ஓ.பி வந்துட்டாரு ஓவர்... பொன்னையன் ஆன் தி வே ஓவர்’ என டென்ஷன் ஏற்றியவர்கள்,  'ஜெ’-வுக்குக் கூடிய கோவைக் கூட்டத்துக்குப் பிறகு கப்சிப்!

தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு, அந்தர் பிரேக். தமிழகப் பள்ளிகளைத் தரம் பிரித்து, 'குறிப்பிட்ட கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்’ என்று அரசு அமைத்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சுப்ரீம் கோர்ட் போயின. ஆனால், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஆதரித்தது!

 'சமச்சீர்க் கல்வி’ சட்ட மசோதா அறிமுகம் ஆனது கல்வித் துறையின் கல்வெட்டு. மாநில அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் எனத் தமிழகத் தில் நான்குவிதமான கல்வி முறைகளுக்கும் இனி, ஒரே பாடத் திட்டம்தான் என்பது தமிழ்ச் சமூகத்தின் முக்கியத் திருப்புமுனை!
 
 பெண்மைக்கு இன்னொரு பெருமை! தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்ட முதல் பெண், லத்திகா சரண். சர்ச்சைகளில் சிக்காத லத்திகா டி.ஜி.பி ஆக நியமிக்கப் பட்டதில் சர்ச்சை சர்க்கஸ். சீனியாரிட்டி கோரிக்கையுடன் நடராஜ் நீதிமன்றத்தை அணுக, மத்தியத் தேர்வாணையம் லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார்... மூவரில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என சுத்தியல் தட்ட, லத்திகா தோளில் ஏறிய ஸ்டாருக்கு ஆயுசு கெட்டி!
 
 அலறவைத்த ஆள்மாறாட்ட க்ரைம். ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஆம்பூர் அருகே வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேறு ஒரு போலீஸ்காரருக்காகத் தீட்டப்பட்ட கொலை அரிவாள், வெற்றிவேல் மீது பாய்ந்தது... முதல் கொடுமை. உயிருக்குப் போராடிக்கிடந்தவரை, பின்னால் வந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான் வேடிக்கை பார்த்தது பெருங் கொடுமை. ஆறஅமர ஆம்புலன்ஸுக்குக் காத்திருந்து, மிகத் தாமத மாக அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் வெற்றிவேல் கொண்டு செல்லப்பட,  பாவம்... உயிர் இழந்தார்!
 
 சென்னை அரசினர் தோட்டத்தில், தனது கனவு மாளிகையான புதிய சட்டசபை வளாகம் - புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்தார் முதல்வர். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா என டெல்லி கில்லிகள் கூடி மார்ச் மாதம் ரிப்பன் வெட்டினார்கள். சுமார் 600 கோடி மதிப்பில் எழுப்பப்பட்ட பிரமாண்ட கட்டடம். இதில் முதல் நிதிநிலை அறிக்கையை, மார்ச் 20-ல் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அன்பழகன்!
 
 இரண்டு, மூன்று கல்லூரிகள் ஆரம்பித்து, தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எனச் சொல்லிக்கொள்ளும்பல குபீர் கல்வி நிறுவனங்களுக்கு ஆப்பு இறக்கியது மத்திய அரசு. இந்தியா முழுக்க அங்கீகாரம் ரத்தான 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 17 கேர் ஆஃப் தமிழ்நாடு!
 
எட்டு அடுக்கு மாடிகள், 11 லட்சம் புத்தகங்கள், ஆய்வு மாணவர்களில் இருந்து குழந்தைகள் வரை தனித் தனிப் பிரிவு என வியக்கவைத்தது  'அண்ணா நூற்றாண்டு நூலகம்’! சுமார் 100 கோடி செலவில் நனவானது முதல்வரின் கனவு.  சாதித்தது, அமைச்சர் தங்கம் தென்னரசுக் குழுவினரின் அசாத்தியப் பணி!
 
ராஜீவ் கொலை வழக்கில் நளினியின் தூக்குத் தண்டனை ஏற்கெனவே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கருணை மனுக்களுக்குப் பதில் இல்லாததால், 'என்னை விடுவியுங்கள்!’ என்று உண்ணாவிரதம் இருந்தார் நளினி. 'ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் அல்ல; ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது’ என்று புறப்பட்டு வந்தது புது விளக்கம். அதிர்ச்சித் திருப்பமாக, சிறையில் செல்போன் பயன்படுத்தினார் என்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி. தொடர்கிறது துயரம்!
 
திண்டுக்கல் பாண்டியன், கூடுவாஞ்சேரி வேலு என இந்த வருடமும் தொடர்ந்தது, போலீஸின் என்கவுன்ட்டர் வேட்டை. மதுரையில் ச்சும்மா ரெண்டு பெட்டி கேஸ்கள் வைத்திருந்த பிக்பாக்கெட்டுகளையும் என்கவுன்ட்டரில் பார்சல் கட்டியது கொடூரம். கோவைப் பிஞ்சுகளை வதைத்த மோகன்ராஜை, போலீஸ் சுட்டுத்தள்ளியது பரபரப்பு. 'போலீஸ் எப்படி சட்டத்தைக் கையில் எடுக்கலாம்!’ என்று தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் புகழேந்தி நீதிமன்றக் கதவு தட்டினார்!
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழுப்புரத்தில் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. அங்கு திரண்ட கட்சியினரின் கூட்டம்தான், கோவை எழுச்சிக்குப் பிள்ளையார் சுழி. கோவையில் திமிறித் திரண்ட தொண்டர்களால், திருச்சி, மதுரை என அடுத்தடுத்து அதகளம். 'ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலை அது’ என்று அரசியல் விமர்சகர்கள் விறுவிறுக்க, கோவை, திருச்சியில் தி.மு.க-வும் கவுன்ட்டர் கூட்டங்கள் நடத்த, ஏக டெம்ப்ரேச்சர்!
 
சிறைப் புலி சீமான். உலகமே பதைபதைக்க நடந்து முடிந்த ஈழக் கொடூரங்களுக்கு எதிரான சீமானின் சீற்றம், ராமேஸ்வரம் கைதுக்குப் பிறகும் குறையவில்லை. சிறை மீண்டவர் 'நாம் தமிழர் இயக்கம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 'நீ தமிழ் மீனவர்களைஅடித்தால், நாங்கள் சிங்கள மாணவர்களை அடிப்போம்’ என்ற கர்ஜனைக்கு மறுபடி பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம். அதையும் உடைத்து இப்போது வெளியில் வந்துவிட்ட சீமான் இன்னும் உறுமுகிறார் காரமாக!  
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர், தொழிற்சங்க இயக்கத்தின் சிறந்த ஆளுமை டபிள்யூ.ஆர்.வரத ராஜன் திடுக்கென்று காணாமல் போனார். சில நாட்கள் கழித்து போரூர் ஏரியில் அவர் உடல் மீட்கப்பட... தோழர்களைக் கவ்வியது துயரம். ஒரு புகாரால், கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் தோழர். தற்கொலைக்கான காரணங்கள் எழுதிக்கிடந்த வரத ராஜனின் கடைசிக் கடிதம்... கண்ணீர்!
 
திருமங்கலம் ஃபார்முலாவில் திகீரடித்தன இடைத் தேர்தல்கள். பென்னாகரம்தான் ஃபுல் காரம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்டதில் எகிறியது எதிர்பார்ப்பு. அ.தி.மு.க-வை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் பிரசாரம் செய்தது காமெடி  ஊசி வெடி. ஆளும் கட்சி சில பல கோடிகளைக் கொட்டியதாக எதிர்க் கட்சிகள் புகார் செய்ய, வழக்கம்போல விறுவிறு விநியோகம். எதிர்பார்த்தபடி தி.மு.க. வென்றது. இரண்டாவது இடத்தை பா.ம.க. லவட்டி, அ.தி.மு.க-வை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது அதிர்ச்சி ஹைலைட்!
 
கோவை  அம்மன்குளம்  பகுதியில்   49 கோடி  செலவில், 936 குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட அரசு திட்டமிட்டது. கட்டுமானப் பணிகளின்போதே, அந்த வீடுகள் சரிந்து பூமிக்குள் இறங்க, கரகரத்தது கான்ட்ராக்ட் டீம். மொத்தமாக இடித்துவிட்டு,  வேறு இடத்தில் புதிய கட்டடம் கட்டப்போவதாக அரசுத் தரப்பு அறிவிக்க, டபுள் டக்கர் வேலை!
 
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில், முதன் முறையாக, தமிழக இளைஞர் காங்கிரஸுக்குத் தேர்தல். சுமார் 14 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்ததாகக் கணக்கு. இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் யுவராஜா. நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பில், வாத்தியாராக ராகுல் வர, கொம்பு சீவிக்கொண்டது காங்கிரஸ்!
 
பொடீர் ரெய்டுகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், நாடு முழுக்க அள்ளப்பட, அதிர்ந்தது தேசம். உணவுப் பொருட்கள் குடோன் ரெய்டுகளில், மிக்சர், சிப்ஸ், பிஸ்கட்டுகள் என ஏராளமான காலாவதியான அயிட்டங்கள்விற்பனைக் குத் தயாராக இருக்க... பறிமுதல் பரேடு நடத்தி குடோன்களுக் கும் சீல் வைக்கப்பட்டது. அரசு இயந்திரம் எவ்வளவு புழுத்துப் போய் இருக்கிறது என்பதன் அடையாளம் இது!
 
இதுவும் மின்வெட்டு வருடம்! 'ஏங்க எசமான் பவர் கட்?’ என்றால், 'இது மின்வெட்டு அல்ல; மின் பற்றாக்குறை’ என குபீர் விளக்கம் தந்தது அரசு. இதைவிட செம விளக்கமாக, 'கடந்த முறை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மின் சேகரிப்புத் திட்டங்களைத் தீட்டாததால்தான் இந்தப் பற்றாக்குறை’ என்றது. எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு ஃப்ளக்கை ஏகமாகச் சொருக, அரசுக்கு ஷாக். கிராமப்புறங்களில் ஏழு மணி நேரம் வரை, நகர்ப்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் எனப் படுத்தியது பாடாவதி பவர்கட்!
 
இதயத்தை அறுத்த சம்பவம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் சென்னை கொண்டுவரப்பட்டார். படுத்த படுக்கையாகக்கிடந்த தமிழ்த் தாயை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தனது பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து இருந்தார். ஆனால், தமிழக அரசின் தடை காரணமாக, மீண்டும் மலேசியாவுக்கே கொண்டுசெல்லப்பட்டார். 'இனி, இந்தியாவுக்கு வர மாட்டேன்!’ என்று சொல்லிவிட்டாள் அந்த இனமான ஈழத்துக் கிழவி!
 
எம்.ஜி.ஆர். காலத்தில் ஒழிக்கப்பட்ட மேல் சபைக்கு, முதல்வர் கருணாநிதி இந்த ஆண்டு உயிரூட்டினார். மத்திய அமைச்சரவையாலும் ஒப்புதல் தரப்பட்டு மக்களவை, மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் வருகிறதாம் மேல்சபை உறுப்பினர்களுக்கானதேர்தல்!
 
சாதிவாரியான மக்கள் தொகைக் கணக் கெடுப்புக்கான குரல் ஓங்கி ஒலித்தது. '2011-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை இந்த அடிப்படை யில்தான் எடுக்க வேண்டும்’ என ராமதாஸ் முண்டாசு கட்ட, அதற்குப் பல்வேறு சாதி அமைப்பு களிடம்அமோக ஆதரவு. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் கமிஷன் அமைக்க உத்தரவிட்டார் முதல்வர்!
 
 உயிர்க்கொல்லி பயங்கரம். காலாவதி மற்றும் போலி மருந்துகள் தமிழகத்தில் தாறுமாறாகப் புழக்கத்தில் இருப்பது தெரியவர, அதிர்ந்தது தமிழகம். குப்பை மேடுகளில் எல்லாம் மருந்துகளைக் கொட்டிவிட்டு ஓடினார்கள். 'அரசு மருத்துவமனைகளிலும் காலாவதி மருந்துகள் வாங்கப்பட்டு இருப்பதாக’ புலனாய்வு தெரிவிக்க, வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. வசம்!
 
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை யில், எம்.எல்.ஏ-க்கள் வீடு கட்டிக்கொள்ள 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். 'எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை நடக்கும் காலத்தில் சென்னை வந்தால் தங்க வீடு இருக்கிறது. பிறகு எதற்கு நிலம்?’ என இதற்கு எதிர்ப்பு மசாலா அரைத்தார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள். ஆனாலும், இது ரொம்ப ஜாஸ்திப்பா!
 
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பத் தாமதம் ஆக, பொதுமக்கள் சத்தம் போட்டதில் கரைச்சல். கோபமான பாதுகாப்புக் காவலாளி ராஜேந்திரன்உணர்ச்சி வசப்பட்டு துப்பாக்கியால் சுட.... நான்கு பேருக்குக் காயம். நிலைமையைச் சமாளிக்க போலீஸ் வர, ராஜேந்திரனின் குண்டுக்கு எஸ்.ஐ. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே சவமானது வேதனை!
 
 'தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை’யில் துண்டு விழுந்தது. ஆன் லைன் வர்த்தகம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிர்ப்பு என்று கிளம்பிய இதன் தலைவர் வெள்ளையனுக்குக் காத்திருந்தது உள்குத்து. இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் வணிகர் சங்கம் சீறி எழ, பிரளயம். விக்கிரமராஜா தலைமையில் புது அணி உருவாக... பேரவை இரண்டானது!
 
முதல்வர் கருணாநிதி தன் கோபாலபுரம் வீட்டை, 'அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’க்குத் தந்தது... வருடத்தின் டாப் தானம். 'எனக்கும் என் மனைவி தயாளுவுக்கும் பிறகு, இந்த வீட்டில் கலைஞர் கருணாநிதி இலவச மருத்துவமனை அமைய வேண்டும்’ என்று கரகரத்தார். அறக்கட்டளையில் கவின்கேர் சி.கே.ரங்கநாதன், இராம நாராயணன், வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தார். இதைவைத்து எதிர்க் கட்சிகள் கேள்வித் தோ'ரணம்’ கட்டின!
 
குடிஅரசு இதழ்களில் பெரியார் எழுதிய தலையங்கம், கட்டுரைகளைத் தொகுத்து பெரியார் தி.க புத்தகமாகக் கொண்டுவந்தது. இதற்குத் தடை கோரி தி.க தலைவர் கி.வீரமணி நீதிமன்றங்களில் முட்டுக்கட்டை போட, 'பெரியாரின் எண் ணங்கள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். அதைத் தடுப்பது முறையல்ல!’ என உயர் நீதிமன்றம் அறிவுரைத்தது!
 
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் அருகே வந்தபோது தண்டவாளம் 'தகர்க்கப்பட்டது’ கண்டுபிடிக்கப்பட்டு, பேராபத்து தவிர்க்கப்பட்டது. புலி ஆதரவாளர்கள் சதி என ஆதாரமே இல்லாமல் கட்லெட் கடித்தது காவல் துறை. 'போலீஸாரின் செட்டப்’ என்பது எதிர் வாதம். ஆறு மாதங்களாகியும் யாரையும் பிடிக்க முடியவில்லை!
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, சாதிச் சான்றிதழை மாற்றியது எனப் பகீர் காரணங்களைச் சொல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரைப் பதவி நீக்கம் செய்தது தமிழக அரசு. 'தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.டி ஆக இருந்த உமாசங்கரை, கருணாநிதி குடும்ப இணைப்புக்குப் பின் கழற்றிவிட்டார்கள்’ என்று பரவிய செய்திகள் சூடான மீடியா சமோசா. உமாசங்கருக்கு ஆதரவு ஆர்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், 'தலித் பாலிடிக்ஸ்’ எனக் குமுறல் எழ... பயந்து, அவருக்கு மீண்டும் பதவியை வழங்கியது அரசு!
 
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டம் போர்க் குரலானது. வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு முதல்வரிடமும் அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு. ஆனால், 'வழக்கறிஞர்களின் போராட்டம் சட்டத்துக்குப் புறம்பானது’ என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சொல்ல, போராட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். 'வழக்கறிஞர்கள் தமிழில் வழக்காடலாம். ஆனால், அதற்காக எந்த சுற்றறிக்கையும் அனுப்ப மாட்டோம்’ என்பது இறுதி சமரசம்!
 
 ஜெயலலிதாவின் 'டாப்’ கொடநாட்டில் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி நடப்பதாக ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் புகார் தட்ட, அங்கு டென்ட் அடித்தது மீடியா. விசாரணைக்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆய்வு செய்து, அனுமதி வாங்கி சிறு கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக அறிக்கை கொடுத்தார். அதிகாரியை உள்ளே நுழையாமல் தடுக்க, கொடநாடு முன்பாக அ.தி.மு.க-வினர் கூடியது பப்பரக்கா பரபரப்பு!  
 
 போலி சாதிச் சான்றிதழில் இருந்து பட்டப் படிப்புச் சான்றிதழ் வரை தமிழகம் பார்த்ததுதான். 2 தேர்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்களும் இருப்பது தெரியவர, கலகலத்தது கல்வித் துறை. பொறியியல் கல்லூரியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும்போது சிக்கிய இந்த போலிச் சான்றிதழ்களால், செம ஷாக்கானார்கள் ஆசிரியர்களும் அதிகாரி களும். சம்பந்தப்பட்ட மாணவிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, போலிப் பட்டியல்களைத் தயாரித்துக் கொடுத்த புரோக்கர்கள் ரவுண்டு கட்டப்பட்டனர்!
 
பதைபதைக்கவைத்த கொடூரம். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் அநாதையாகக்கிடந்த ஒரு சூட்கேஸில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான் ஆதித்யா என்ற சிறுவன். சென்னையைச் சேர்ந்த ஜெயகுமார்-அனந்தலட்சுமி தம்பதியின் மகன் ஆதித்யா. இவர் வீட்டில் வேலை பார்த்த பூவரசிக்கும் ஜெயகுமாருக்கும் லிங்க். ஜெயகுமார் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், பழி வாங்கவே அந்த அப்பாவிப் பிஞ்சை பூவரசி கொன்றதாக செய்திகள் வர, குமுறியது தமிழகம். பூவரசி இப்போது சிறையில்!
 
கக்கன் நூற்றாண்டு விழாவை மதுரையில் களேபரப்படுத்தியது தமிழக காங்கிரஸ். கோஷ்டிகளை மறந்து அத்தனை தமிழக காங்கிரஸ் தலைகளும் ஒரே மேடையில் கூடியது கொலக் குத்து எக்ஸிபிஷன். 'தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி’, 'காமராஜர் ஆட்சி’ என கொத்து பரோட்டா கோஷங்கள். ஈ.வி.கே.எஸ்., கார்த்தி சிதம்பரம் போன்றோர் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிக்க, வெறியாலயம் ஆனது அறிவாலயம். அடுத்து, திருச்சியில் கூட்டம் போட்டு சோனியாவைக் கொண்டுவந்து உற்சாகம் ஏற்றிக்கொண்டார்கள்!
 
 தமிழகத்தையே உலுக்கி, மூன்று அப்பாவி மாணவிகளைப் பலிகொண்ட தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிரடித் தீர்ப்பு. குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க பொறுப்பாளர்களான முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூவருக்கும் சேலம் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்! இப்போது ஜனாதிபதி வசம் கருணை மனு!
 
காவிய சின்னம் தஞ்சை பெரிய கோயிலுக்கு 1,000 வயது. 1,000 கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியம், ராஜராஜன் உருவம் பொறித்த ஐந்து நாணயங்கள், சிறப்புத் தபால்தலை வெளியீடு என விறுவிறுத்தது விழா. பெரிய கோயிலில் நடந்த விழாவில் பட்டு வேட்டி-சட்டையில் முதல்வர் கலந்துகொண்டது பளபளபள ஹைலைட்!
 
சேலம் அருகே  ஓய்வு பெற்ற  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  குப்புராஜ், அவரது  உறவினர்கள் என ஆறு  பேர்  வெட்டிக்  கொலை  செய்யப்பட, தமிழகமே அதிர்ந்தது. சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். சொந்தக் கட்சிக்காரரைப் பாரபட்சமின்றி கைது செய்த பாராட்டு வார்த்தைகள் கரையும் முன், தம்பி மகனை ஜெயிலில் சந்தித்து, பல ஆவேசப் பேட்டிகளைத் தட்டி, கட்சிக்கும் தலைமைக்கும் சங்கட சங்கு ஊதினார் வீரபாண்டியார்!
 
ஸ்பெக்ட்ரம் பிரச்னையின் சூத்திரதாரி ஆ.ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என இடி இடித்தன எதிர்க் கட்சிகள். 'பிரதமர் இட்ட கட்டளைப்படிதான் செயல்பட்டேன்’ என ராசா எத்தனை மழுப்பல் தோசா ஊற்றியும் வொர்க்-அவுட் ஆகாததால், பதவியை ராஜினாமா செய்தார். 'நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காத்த ஆ.ராசா தகத்தகத் தகத்தகாய சூரியன்’ என கருணாநிதி அறிக்கை ஆனியன் உரித்தார். இப்போது ராசாவின் நண்பர்கள், உறவினர்கள், முக்கியப் புள்ளிகள் ஏரியாக்களில் ரெய்டு லாடம்!
 
 மிரட்டல் கடித ஜாலிகள். அழகிரி பூமி மதுரையில் ஆர்பாட்டம் நடத்த ஆயத்தமான ஜெ-வுக்கு அடுத்தடுத்து வந்த மிரட்டல் கடிதங்கள், டெரர் காமெடி. அரசரடி அசோகன், ஆரப் பாளையம் நம்பியார் என்கிற ரீதியில் பெயர் போட்டு வந்த கடிதங்கள், 'மதுரைக்கு வந்தா பிச்சு... பிச்சு..’ என்றன. அத்தனை யும் ஃபோர்ஜரி முகவரிகள். ட்விஸ்ட்டுகளைக் கடந்து மதுரையில் மைக் பிடித்து அழகிரியை செம ரவுண்டு கட்டினார் ஜெ. அதன் பிறகு, கலைஞருக்கும் மிரட்டல் கடிதங்கள் வர ஆரம்பித்தது நான்ஸ்டாப் நகைச்சுவை!
 
ஐந்து முட்டை ஜிங்குச்சா. வாரத்துக்கு ஐந்து பள்ளி நாட்களிலும் முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர். எம்.ஜி.ஆர் காலத்தில் வாரம் ஒருநாள் முட்டை அறிமுகம் ஆனது. கருணாநிதி ஆட்சியில் அது மூன்று ஆகி, இப்போது ஃபைவ் ஸ்டார் ஆகிஇருக்கிறது!
 
 திரைக் கலைஞர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு சென்னை பையனூர் பகுதியில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், 'சினிமா உலகுக்கும் எனக்குமான தொடர்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!’ என முடிச்சை இன்னும் இறுக்கினார் முதல்வர்!
 
தமிழகத்தையே பாவமும் கோபமுமாகத் துடிக்கவைத்தது அந்தக் கோவை சம்பவம். பள்ளிக்குப் போன முஸ்கன், ரித்திக் என்ற அக்கா-தம்பியைக் கடத்திக் கொன்றான் மோகன்ராஜ் என்ற கொடூரன். சிறுமி முஸ்கனைச் சிதைத்து, இருவரையும் கொன்று ஆற்றில் வீசியது மன்னிக்க முடியாத மகா பாவம். மோகன்ராஜ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட, பட்டாசு வெடித்து ஆதரித்தனர் கோவைவாசிகள்!
 
மழையும் வெள்ளமுமாக இது 'ஜல்ப்பு’ ஆண்டு! ஜில் என்று வந்தது 'ஜல்’. பேய் மழையால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனதாகப் புள்ளிவிவரங்கள். விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது டெல்டா துயரம். பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகள் இழந்தவர்கள், பலி ஆனவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவித்தொகைகளை அறிவித்தது!
சுற்றுச்சூழலுக்கு அது பொன்னாடைத் தீர்ப்பு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலே பாதிக்கப்பட, தன்னார்வத் தொண்டு அமைப்புகளும், ம.தி.மு.க - கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொந்தளித்தன. 15 ஆண்டு போராட்டத்தில் ஆலையை மூடச்  சொல்லி வந்தது தீர்ப்பு. ஆனால், உச்ச நீதிமன்ற மேல் முறையீடு காரணமாக, ஆலை இன்னமும் மூடப்படவில்லை!
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. 1991-ல் இருந்து நடக்கிறது மத்திய அரசின் இந்தத் தடை நீட்டிப்பு. இதற்கான ஆணையத்தில், இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் புலிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இம்முறை வைகோ ஆஜராகி தடையை நீட்டிக்கக் கூடாது என்று வாதாடினார். 'தடை நீடிக்கும்’ என்றது தீர்ப்பு!
 
 மதுர குலுங்க... குலுங்க... நடந்தது அழகிரி மகன் துரை தயாநிதி - அனுஷா திருமணம். ஜுஜுபி விழா என்றாலே அலப்பறையாகும் அஞ்சா நெஞ்சன் ஏரியாவில், பப்ளிகுட்டி அடக்கியே வாசிக்கப்பட்டது. பிரதமர், சோனியா வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, பிரணாப் முகர்ஜி 'உள்ளேன் ஐயா’ சொல்ல, ரஜினி, கமல் என அத்தனை வி.வி.ஐ.பி-க்களும் ரவுண்டு கட்ட, ஜிகுஜிகுத்தது மதுரை!
 
 ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க. இமேஜ் மீது புல்டோசர் விட்டது. யார் கருவாடு... யார் பூனை? என அல்லுவிட்டது அறிவாலயம் ஏரியா. குழம்பிப்போன தலைவரே, "கோபாலபுரம் வீட்டைத் தவிர, எனக்கு வேறு சொத்துக்கள் இல்லை'' என தன் சொத்துக் கணக்கு வெளியிட வேண்டிய அளவுக்கு நிலைமை. 'ஊழலைப் பொறுத்தவரை என் உதவியாளர்கள் சொல்வதைப்போல நான் நெருப்பு!' என்றது பஞ்ச் டிஞ்ச்!

No comments:

Post a Comment