Wednesday, January 5, 2011

மடியில் கனம்; வழியில் பயம்!

2ஜி அலைக்கற்றை விற்பனைப் பிரச்னை வந்தாலும் வந்தது, நம்முடைய அரசியல் தலைவர்களின் ஒட்டுமொத்த புத்திசாலித்தனமும் (பொறுப்பற்றதனமும்?) அவர்களுடைய பேச்சில் அலையலையாக வரத் தொடங்கிவிட்டது. இவர்கள் கூறுவதை அப்படியே அர்த்தம் செய்து கொண்டால், ""நம் நாட்டுக்கு நாடாளுமன்றம் எதற்கு, நீதிமன்றம் எதற்கு, நமக்கு ஜனநாயகம்தான் எதற்கு?'' என்று பொதுமக்கள் அனைவரும் சிந்திக்கத் தலைப்பட்டாலும் வியப்பு ஏதும் இல்லை.  மூத்த அரசியல் தலைவரும் ராஜதந்திரியும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் சமய சஞ்சீவியாக ஆலோசனைகளைக் கூறி அறிக்கைகளைத் தயாரித்து காப்பாற்றுபவருமான நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள சில கருத்துகள் துணுக்குற வைக்கின்றன.  ""பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் என்னைக் கலந்தாலோசிக்காமல் அறிவித்துவிட்டார். என்னைக் கேட்டிருந்தால் அவ்வாறு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தடுத்திருப்பேன்'' என்று கூறியிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ""பிரதமரும் அமைச்சர்களும் நாடாளுமன்றத்துக்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள், நாடாளுமன்றக் குழுக்களுக்கு அல்ல'' என்றும் பேசியிருக்கிறார்.  ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம்தான் உயரியது, அதில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் குழு அப்படியல்ல என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். நாடாளுமன்றக் குழுக்கள் என்பவை நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆனதுதானே தவிர, உறுப்பினர்கள் அல்லாதவர்களைக் கொண்டவை அல்லவே?  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து ஒவ்வொன்றையும் விவாதித்து முடிவு செய்வது காரிய சாத்தியம் இல்லை என்பதாலும், ஒவ்வொரு துறைக்கும் அதில் அனுபவமும் ஈடுபாடும் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைத்து விரிவாக விவாதித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதாலும் நாடாளுமன்றத்தில் வெவ்வேறு துறைகளுக்கு ஆலோசனைக் குழுக்கள் என்று பல கமிட்டிகள் நியமிக்கப்படுகின்றன.  அரசின் செலவையும் அரசுத்துறைகளின் செலவையும் ஆராயவும் அரசுக்கு ஆலோசனைகள் கூறவும், தவறு அல்லது முறைகேடுகள் இருந்தால் சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் நியமிக்கப்படுவதுதான் பொதுக் கணக்குக் குழு. அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்ற தகவலைப் பகிரங்கப்படுத்தத்தான் எதிர்க்கட்சி உறுப்பினரை அதற்குத் தலைவராக நியமிக்கிறார்கள்.  நாடாளுமன்றக் கூட்டுக்குழு எதற்கு பொதுக்கணக்குக் குழுவே விசாரிக்கலாமே என்று கூறிவிட்டு, இப்போது அந்தக் குழுவின் விசாரணைக்குக்கூடப் பிரதமர் தன்னை உள்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றால், அப்படி அமைச்சர்களைக்கூட அழைத்து விசாரிக்க முடியாத அந்தக் குழுவின் விசாரணையால் என்ன உண்மைகள் வெளிவந்துவிடப் போகின்றன? நாடாளுமன்றக் குழுக்களுக்கு புனிதமும் இல்லை, அதிகாரமும் இல்லை என்றால் அவற்றைக் கலைத்துவிடலாமே?  இதெல்லாம் ஊகம்தான், இது ஊழலே அல்ல, இது முறைகேடும் அல்ல என்று புதிய சாத்திரம் பேசும் இந்தத் தலைவர்கள், இந்த உரிமத்தை ஏற்கெனவே சொல்லி வைத்து வாங்கியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே விற்று பலமடங்கு பணம் பெற்றதன் பிறகும்கூட இதில் நஷ்டம் இல்லை என்று எப்படிச் சொல்கிறார்கள். இன்றுவரை இந்த விவகாரத்தை இழுத்து மூடத்தான் முயற்சி நடக்கிறதே தவிர உண்மையை வெளிக்கொண்டுவர அல்ல.  சரி, நமது நிதியமைச்சர் கூறியிருப்பதைப் போல, "பிரதமரும் அமைச்சர்களும் நாடாளுமன்றத்துக்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்றக் குழுக்களுக்கு அல்ல' என்கிற வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக்கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதிர்க்கட்சிகளும் பொதுக் கணக்குக் குழு முன் பிரதமர் ஆஜராக வேண்டும் என்று கோரவில்லையே. அவர்கள் கேட்பது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவைத்தானே?  மக்களாட்சித் தத்துவத்தில் அவையில் பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சி அமைக்கும் அவ்வளவே. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளும்கட்சி எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளவோ நிறைவேற்றிக் கொள்ளவோ முடியாது. நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இயற்றும் சட்டங்கள் மற்றும் சட்டத்திருத்தங்கள்கூட, அவை அரசியல் சட்டத்தின் வரைமுறைகளுக்கு உள்பட்டதுதானா என்று ஆய்வுசெய்து, அரசியல் சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தால் அந்தச் சட்டத்தையோ, சட்டத் திருத்தத்தையோ ரத்து செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.  அதேபோல, எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை தர வேண்டிய கடமை ஆளும்கட்சிக்கு உண்டு. அப்படித் தரப்படாவிட்டால், அவர்கள் அவையைப் புறக்கணிப்பதும், கூட்டத்தொடரை நடக்கவிடாமல் தடுப்பதும் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைதான் என்பதை தெஹல்கா ஊழல் வெளியானபோது, நாடாளுமன்றச் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி முடக்கியதே அப்போது வலியுறுத்தியதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறந்திருக்க வாய்ப்பில்லை.  மடியில் கனம் இல்லை என்றால் எந்தவிதமான விசாரணைக்கும் அனைவரும் உள்பட வேண்டாமா? ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'', ""மத்திய அமைச்சரவையில் பிரதமர் என்பவர் சக அமைச்சர்களைக்காட்டிலும் முதன்மையானவர் - அவ்வளவே'' என்ற தத்துவம் எல்லாம் வெறும் பேச்சுக்குத்தானா?  வரவர நிதியமைச்சரின் பேச்சுகளும் செயல்பாடுகளும் அரசைக் காப்பாற்றும் விதமாக இல்லை என்று தோன்றுகிறது. தீர்வுகாண வேண்டியவர் பிரச்னைகளை அதிகப்படுத்தி மேலும் தர்மசங்கடங்களை ஏற்படுத்துகிறாரே, அதுதான் ஏன் என்று புரியவில்லை.

No comments:

Post a Comment