Saturday, January 1, 2011

2010 - ஃப்ளாஷ்பேக்


2010... இந்த ஆண்டை நினைவுகூரச் சொன்னால், சாமானிய இந்தியன் மனத்தில் சட்டென வந்தமரும் அலைக்கறை ஊழல் விவகாரம்!
உலக நிகழ்வுகளை நோக்கச் சொன்னால், பலரது பார்வை 'விக்கிலீக்ஸ்' மீதே படியும் என்பது தெளிவு.
2ஜி-யைப் பற்றி பாமரனும் கருத்து கூறும் அளவுக்கு ஓரளவு புரிதல் பெற்றிருப்பது, இந்திய ஊடகச் சக்திக்கு சான்று என்றால் அது மிகையாகாது.
அதேபோல், உலக அரங்கில் ஊடகப் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது, 'விக்கிலீக்ஸ்'. அதிகார நெருக்குதல்களினால் பத்திரிகைகள் நெருங்க முடியாத ஆழத்தை வெளிக்கொணர்ந்த வகையில், அசாஞ்ச் போன்றோரின் தேவை அத்தியாவசியமாகிறது.
விக்கிலீக்ஸ் செய்து வருவது ஊடக நெறிகளுக்கு உகந்ததாக முரணானதா என்ற விவாதம் எழுந்ததும், சமகாலத்துக்கு கட்டாயமானதே என்றுச் சொல்லலாம்.
இந்திய அளவிலும் உலக அளவில் 2010-ல் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளில் குறிப்பிடத்தவை:::
இந்தியா
ஊழல் காலம்!
மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிகழ்ந்த மெகா ஊழல், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், மகாராஷ்ட்ராவில் கார்கில் வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு திட்டத்தில் நடந்த ஊழல், கர்நாடகாவில் சுரங்கத் துறை முறைகேடு மற்றும் எடியூரப்பா மீதான நில மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட ஊழல் விவகாரங்கள் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமதிப்பை ஏற்படுத்தின.
தீர்ப்புகள்...
மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும், அதேநேரத்தில் சில விஷயங்கள் ஏமாற்றம் தரும் வகையிலும் அமைந்தது, 2010 ஆம் ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்புகள்.
காமன்வெல்த் ஊழல் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளில் மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் கிடுக்குப்பிடி போட்டது, உச்ச நீதிமன்றம். அதேபோல், கிடங்குகளில் வீணாகும் உணவு பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கக் கூடாதா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அழுத்தமாகக் கேட்டதைக் குறிப்பிடலாம்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.
அயோத்தி பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிந்தைய அமைதி நிலைமை, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெரும் நிம்மதியைத் தந்தது.
அதேநேரத்தில், போபால் நச்சுப்புகை வெடிக்க காரணமான குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டது, மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பெரும்பாலானோர் மத்தியில் அதிருப்தியைத் தந்தது.
தேர்தல் பாடம்...
2010 ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, பீகார் மாநில தேர்தல். இதில், காங்கிரஸ் கட்சிக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சிக்கும் மக்கள் பாடம் கற்பித்தனர்.
மக்களுக்கு நல்லாட்சி தந்தால், அவர்களின் அமோக ஆதரவைப் பெறுவது உறுதி என்பதை இந்தத் தேர்தலின் மகத்தான வெற்றி மூலம் நிரூபித்தார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார். 

விருந்தாளிகள்...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை புரிந்ததும் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்தது. நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்துகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல், பிரான்ஸ் அதிபர் சர்க்கோஸி, ரஷ்ய அதிபர் மெத்வதேவ் ஆகியோரின் வருகையும் குறிப்பிடத்தக்கவை.
வெறும் விளையாட்டல்ல...
காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக 101 பதக்கங்களைக் குவித்தது, இந்திய விளையாட்டு நிகழ்வில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதன் மூலம் தடகள வீரர்கள் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியது.
பேட்மின்டனில் சாய்னா நேவால், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், மேரி கோம், மல்யுத்தத்தில் சுஷீல் குமார், செஸ்சில் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸில் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் தங்கள் திறமையின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
ஐபில்-லில் சென்னை சூப்பர் கிங் சாம்பியன் பட்டம் வென்றது, தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கிரிக்கெட்டைப் பொருத்தவரை, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே தோனி தலைமையிலான இந்திய அணி 2010-ல் தனது திறனை வெளிப்படுத்தியது.
குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களைத் தொட்டு சாதனை புரிந்ததும், டெஸ்டில் 50வது சதத்தைப் பூர்த்தி செய்ததும், இந்திய விளையாட்டை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது.

உலகம்
உதைத் திருவிழா!
கால்பந்தாட்டத் திருவிழாவை அசத்தலாக நடத்தி, உலகின் பார்வையை வசப்படுத்தியது, தென்  ஆப்பிரிக்கா.
2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண்பதற்காக, உலக நாடுகளில் இருந்து தென்  ஆப்பிரிக்காவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 3,09,000. இவர்களில் 59 சதவீததினர் முதல்  முறையாக வருகை புரிந்தவர்களாவர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க சுற்றுலாத் துறைக்கு மட்டும் கிடைத்த வருவாய், 520 மில்லியன்  டாலர்கள். இந்த உலகக் கோப்பை கால்பந்து மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய அம்சங்களுள்  ஒன்று... 'ஆக்டோபஸ் ஜோதிடம்'!

'சிலி'ர்ப்பு!
ஆகஸ்ட் மாதம் பூமிக்கடியில் 800 மீட்டர் ஆழத்தில் சிக்கிய சிலி நாட்டைச் சேர்ந்த 33 சுரங்கத்  தொழிலாளர்கள், 69 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு, உலக மக்களை சிலிர்க்க  வைத்தது.
சிக்கியவர்களின் மன உறுதி, மீட்புப் பணியின் சோர்வின்மை இவற்றோடு, தொழில்நுட்பத்தின்  உறுதுணையும் இணைந்து இந்த அதிசய மறுபிறப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன.  ஒவ்வொருவராக மீண்ட தருணங்களை உலகமே கண்ணிமைக்காமல் தொலைக்காட்சி வழியாக  கண்டு நெகிழ்ந்தது.

விக்கிட வைத்த லீக்ஸ்!
ஆப்கான், ஈராக் போர் மற்றும் தூதரக ரகசியங்களைக் கசிய விட்டு, அமெரிக்காவின் கண்களில்  மவுஸ் விட்டு ஆட்டிய விக்கிலீக்ஸ், 2010 ஆம் ஆண்டு உலகின் எல்லா நாட்டு ஊடங்களுக்கும்  தீனி போட்டது.
தனது நட்பு நாடுகளுடனான உறவை உலுக்கிப் பார்த்த விக்கிலீக்ஸை எப்படி வீழ்த்துவது என விழிப்  பிதுங்கியது அமெரிக்கா. அதிகபட்சமாக, தனது அதிகாரத்தைக் கொண்டு, விக்கிலீக்ஸ்சுக்கு  பெரிய அளவில் நன்கொடைகள் கிடைக்கவிடாமல் தடுக்க மட்டுமே ஒபாமா அரசால் முடிந்தது!
பேரழிவுக் காலம்!
ஹைத்தி பூகம்பம், ரஷ்ய வெயில், பாகிஸ்தான் வெள்ளம் என உலக நாடுகள் முழுவதும் 2010-ல் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகள், ஒரு தலைமுறை கண்டிராதது.
இந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் சுமார் 2,60,000 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது  இயற்கையின் தாண்டவங்கள். இந்த எண்ணிக்கை 2009-ல் 15 ஆயிரமாக இருந்தது.
2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 222 பில்லியன் டாலர்கள் அளவில்  பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹைத்தி போன்ற பெரும் மதிப்பிலான காப்பீடுகள் இல்லாத பகுதிகளில் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளதால்,  உண்மையான பொருளாதார இழப்பு இன்னும் பல்லாயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்பதை  மறுக்க முடியாது.
விடுதலையான சிறைப்பறவை..
பர்மாவில் விடுவிக்கப்பட்ட சிறைப் பறவை ஆங் சான் சூ கி-யை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போதைய மியான்மரில் ஜனநாயகப் புரட்சித் தலைவி என்னச் செய்யப் போகிறார்? என்பது அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்களிடையேயும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
சூ கி விடுதலைச் செய்யப்பட்டாலும், மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.
ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயலாற்ற முனைப்புடன் இருப்பதாக கூறியுள்ள ஆங் சான் சூ கி, மக்கள் விரும்பினால் மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க, மேற்கத்திய நாடுகளுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
எனினும், சிறையில் உள்ள 2000 அரசியல் கைதிகளின் விடுதலையைப் பொறுத்தே தனது செயல்பாடு அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை!
காலி நாற்காலியில் நோபல்!
சீனாவின் ஆவேச ஆரவாரத்தால் டிசம்பர் முதல் வாரத்தில் அமைதி நோபல் சர்ச்சை உச்சத்தை  எட்டியது. நார்வேயில் நடந்த விழாவில், சீன ஜனநாயகப் போராளி லியூ ஜியபோவுக்கு 2010 ஆம்  அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
லியூ சிறையில் இருப்பதால், அவர் அமர வேண்டிய காலி நாற்காலியில் பரிசினை வைத்து  கௌரவித்தது, நார்வே கமிட்டி.
சீனாவின் வலியுறுத்தலுக்கு செவி சாய்க்காமல் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்டு  உள்பட 46 நாடுகள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டன.  ரஷியா, பாகிஸ்தான் உள்பட 15 நாடுகள் புறக்கணித்தன.
மந்திரச் சாதனம்!
2010-ல் உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பைப் பெற்ற அறிமுக உபகரணம் என்ற பெருமையை  வசப்படுத்தியது, ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ பேட்'.
ஸ்மார்ட்போனுக்கும் லேப்டாப்/நெட்புக்-குக்கும் இடைப்பட்ட இந்த மொபைல் சாதனம், கடந்த  அக்டோபர் மாதக் கணக்குப்படி, உலக அளவில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்  விற்பனையாகி இருக்கிறது. அதுவும் ஏழே மாதங்களில்.
அண்மைய வெளியீடான சாம்சங் மற்றும் கூகுளின் டேப்லட் கம்யூட்டருக்கு முன்னோடியாக  அமைந்ததே இந்த ஐ பேட் தான்!!!!

No comments:

Post a Comment