Wednesday, August 17, 2011
அதிகார மமதை!
எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே. 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள், அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை. சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment