Monday, March 18, 2013

இதை எதிர்ப்பானேன்?


தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் படிக்காமலேயே முனைவர் பட்டம் வரை பெற முடியும். அதற்காக இங்குள்ள எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் எல்லா பெற்றோரும், தனது குழந்தை ஆங்கிலத்தில் "டாடி, மம்மி' என்று அழைக்க வேண்டும், சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். புற்றீசல்போலக் கிராமம்தோறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் தமிழில் பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுவார்கள். அதைப்பற்றியாவது ஏதாவது அரசியல் கட்சியோ, அரசியல்வாதியோ கவலைப்பட்டார்களா என்றால் இல்லை.
தெருத்தெருவாக ஊர்வலம் நடத்தி, "தமிழ் வழியில்' பாடம் நடத்தும் அரசுப் பள்ளியில் சேர அழைப்பு விடுத்தாலும் மாணவர் சேர்க்கை வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. தேர்ச்சி விகிதம் குறைகிறது. கல்வித்தரம் குறைகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் சம்பளம் மட்டும் உயரும். கற்பித்தலுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். இதைப் பற்றியும் நமது அரசியல் தலைவர்கள் கவலைப்படவில்லை.
ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழில் எழுதப் புதிய நிபந்தனைகள் போடுகிறார்கள் என்பதுதான் இன்றைய மிகப்பெரும் கவலையாக இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியத் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தும்போது தேசிய மொழியான ஹிந்தி, தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில்தான் நடத்துகின்றது. இதில், "எட்டாவது அட்டவணையில்' இடம்பெற்றுள்ள மாநில மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை:
1. இந்தி, ஆங்கிலம் தவிர்த்து மாநில மொழிகளில் தேர்வு எழுத விரும்பினால், அவ்வாறு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 25 பேராக இருக்க வேண்டும்.
2. அவ்வாறு மாநில மொழியில் எழுதுபவர் அந்த "மாநில மொழிவழியில்' கல்வி பயின்று இருக்க வேண்டும்,
3. விருப்பப் பாடத்தை, "இலக்கியம்' எனத் தேர்வு செய்வோர், தமது பட்டப்படிப்பில் அந்த மொழியை "முதன்மைப் பாடமாக'ப் படித்தவராக இருக்க வேண்டும்.
இதில் பெரும்பிழை, அல்லது மத்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கும் "உள்நோக்கம்' ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில மொழியில் தேர்வு எழுதும் அனைவருக்கும் இது பொதுவானது. குஜராத்தியானாலும், வங்காளி ஆனாலும், மலையாளமானாலும், பஞ்சாபி ஆனாலும் இதுதான் விதி எனும்போது, அதில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது.
உண்மையில் மத்தியத் தேர்வாணையம் செய்துள்ள இந்த மாற்றம்தான் கிராமப்புற மாணவர்களுக்குச் சாதகமானது; இதை "எதிரானது' என்று எதற்காகக் குரலெழுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால்தானே, பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ். தேர்வைத் "தமிழில்' எழுத முடியும் என்ற நிலை உருவானால்தானே, அத்தனை பெற்றோர்களும் இனி அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.
ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத குறைந்தபட்சம் 25 பேர் தேறமாட்டார்கள் என்றால், அந்த மாநிலத்தில் தாய்மொழிக் கல்வியே இல்லை என்பதுதான் பொருள். இந்த அப்பட்டமான உண்மையை மத்திய தேர்வாணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்து, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத 25 பேர்கூட இல்லை என்கின்ற அவல நிலை இருக்குமானால், அந்தக் குற்றத்துக்காக கூனிக் குறுக வேண்டியவர்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாகத் தமிழின் பெயரால் மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தமிழகத்தை "ஆண்டவர்கள்'தானே?
இன்றைய மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்குவிப்பவர்களும், அரசுப் பள்ளியைத் தரம் தாழ்த்தியவர்களும் இதே அரசியல்வாதிகள்தானே?
அரசுப் பள்ளிகளின் தரத்தை அதலபாதாளத்தில் தள்ளி, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதே கௌரவத்திற்கு இழுக்கு என்று பெற்றோரை முகம் சுளிக்க வைத்தவர்கள் இவர்கள்தானே?
மத்தியத் தேர்வாணையம் ஏற்படுத்தியுள்ள மற்றொரு மாற்றம் ஆங்கிலத் திறனுக்கு தேர்வு மதிப்பீட்டில் அதிக முக்கியத்துவம் தருவது என்ற முடிவு. இது தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, ஹிந்தியில் தேர்வு எழுதுவோருக்கும் பொருந்தும். ஆகவே இந்த விதிமுறை கிராம மாணவர்களுக்கு எதிரானது என்று எப்படிக் குறை சொல்ல முடியும்?
காலத்தின் தேவை கருதியும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உலகளாவிய தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச்சு மற்றும் எழுத்துத் திறன் கொண்டவர்களாக இருப்பது அவசியம் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்தியத் தேர்வாணையம் கூறுவதில் நியாயம் இருக்கிறது. உலக அளவில், சீனா, ஐப்பான் உள்ளிட்ட பல நாடுகளேகூட, ஆங்கிலத்திறன் மேம்பாட்டுக்கு இப்போது அதிக முக்கியத்துவம் தருகின்றன எனும்போது, நமது அதிகாரிகள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?
தமிழ்வழிக் கல்வி மூலம் பட்டப்படிப்பு முடித்த மாணவரால் தமிழில் நன்றாக எழுத முடியும். அவருக்கு ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம் என்பதால், ஆங்கிலத்திலும் ஓரளவு பயிற்சி இருக்கும். இவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு முன்பாக, நல்ல ஆசிரியர்களைக் கொண்டு ஆங்கிலம் கற்றுக் கொண்டால், ஆறு மாதத்தில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். அரசு இதை இலவசமாக அந்த மாணவர்களுக்கு வழங்க முடியும்.
மத்தியத் தேர்வாணையம் செய்திருப்பது காலத்திற்கேற்ற மாற்றம். மாநில மொழிகளை உயிர்ப்புடன் உலவவிடச் செய்யும் நல்லதொரு முயற்சி. இதை எதிர்ப்பவர்கள் தாய்மொழி துரோகிகள்!

No comments:

Post a Comment