Wednesday, March 20, 2013

கொத்துக் குண்டும், ரத்த விருந்தும்!!!

இந்தப் பக்கத்தில் இருக்கும் படத்தைப் பாருங்கள். கொத்துக் குண்டுகளைப் போட்டு நடத்திய கொலை பாதகச் செயலுக்கு கொழும்பில் மட்டும் கொண்டாட்டங்கள் நடக்கவில்லை. டெல்லியில் நடந்த விருந்தை யாராவது மறக்க முடியுமா?மகாத்மாவின் சிலையை வெளியில் வைத்துவிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்ளே நடந்த 'ரத்த’ விருந்தில் கையில் கோப்பைகளுடன் சோனியா, கேலிச் சிரிப்பில் மகிந்த ராஜபக்ஷே, முகத்தில் எந்தச் சலனமும் காட்டாத மன்மோகன், தமிழகத்தில் மூன்று வழக்குகளில் 'தேடப்படும் குற்றவாளி’யாகக் கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா பக்கமாகத் திரும்பி நிற்கும் ப.சிதம்பரம்.... எதிர் வரிசையில் மகிந்தாவின் மனைவி ஷிராணி, அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மன்மோகனின் மனைவி... ஆகியோர் பங்கேற்ற 'படா கானா’ அது. இதை எல்லாம் மறதிக்குப் பெயர்போன மக்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது என்ற தைரியத்தில் கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மன்மோகன் பேசியிருக்கிறார்.
'இலங்கைத் தமிழ் மக்கள் அடைந்து வருகிற துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதை, இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் பிரச்னைகள் இருக்கின்றன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம்'' - இதுதான் மன்மோகன் வார்த்தைகளின் சாராம்சம். கவலை அளிக்கிறது, துக்கப்படுகிறோம், கவனிக்கிறோம், பார்க்கிறோம், பரிதாபப்படுகிறோம், யோசிக்கிறோம், சொல்கிறோம்... என்பதைத் தாண்டி அவரது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. வரவும் வராது.
வந்தால், இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது மத்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகளை மகிந்த ராஜபக்ஷே அம்பலப்படுத்திவிட மாட்டாரா? அந்த பயம்தான், மன்மோகனை ஆட்டிப்படைக்கிறது. சோனியாவை அச்சம்கொள்ள வைக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் துயரம் அடைந்துவருவது, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவும் வெங்கய்யா நாயுடுவும் சொல்லித்தான் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? 2004-ம் ஆண்டு முதல் ஈழத் தமிழர் விவகாரத்தில் தன்னுடைய மன சாட்சியை மகிந்த ராஜபக்ஷேவுக்கு அடகுவைத்துவிட்ட மனிதர் ஒருவர் உண்டென்றால், அது மன்மோகன் சிங்தான். கொத்துக் குண்டுகளைப் போட்டும் வெள்ளை பாஸ்பரஸைத் தூவியும் ஓர் இனத்தையே கருவறுத்தபோது அதை, ஜடமாக இருந்து பார்த்தவர் அவர்தான். இதை காங்கிரஸ் அரசு மறைக்கலாம். மறுக்க முடியாது.
இலங்கை அதிபராக ராஜபக்ஷே பொறுப்பேற்கும்போது(2005), அந்த நாட்டில் சண்டை இல்லை. நான்கு ஆண்டுகளாக போர் நிறுத்தம் இருந்தது. அதைமீறி சண்டையைத் தொடங்கி, ஈழத் தமிழர்கள் அனைவரையும் முடிக்க நினைக்கிறார் அவர். இந்திய அரசும் தமிழக அரசும் தங்களுக்குச் சாதகமாக அமைந்தால் நல்லது என்று அவர் நினைக்கிறார். பிரதமர் மன்மோகனை வந்து சந்திக்கிறார். ராணுவரீதியாக உதவி செய்யும் கோரிக்கையுடன் அவர் வருகிறார். மத்திய அரசு சம்மதிக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க ராஜபக்ஷே திட்டமிடுகிறார். ஆனால், அதை ஜெயலலிதா நிராகரிக்கிறார். இது அவருக்கு ஏமாற்றம் கொடுத்தாலும் காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்பு கை கொடுக்கிறது. தன்னுடைய சகோதரர்கள் கோத்தபய, பஷில் ஆகிய இருவரையும் அனுப்பிவைத்து இந்திய ராணுவ அதிகாரிகளைச் சந்திக்கவைக்கிறார். 'இந்திய - இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்யப்போகிறோம்’ என்று மகிந்த அறிவிப்பைப் பார்த்ததும் அன்று காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த வைகோ, பிரதமர் மன்மோகனைச் சந்தித்துக் கேட்கிறார். 'இல்லை அப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை’ என்று பிரதமர் சொல்கிறார். அடுத்த சில நாட்களிலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், கொழும்பு சென்று கொடுத்த பேட்டியில், 'உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய - இலங்கை ராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்கான பணிகள் நடக்கிறது’ என்று மகிழ்ச்சியாய் அறிவித்தார். வெளிப்படையாக ராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டால் தமிழ் மக்களது எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்பதால், ராணுவ ஒப்பந்தத்தை இலங்கையின் வளர்ச்சிக்கான ஒப்பந்தமாகத் தந்திரமாக மாற்றுகிறார்கள். 'ராணுவ ஒப்பந்தம் போடாவிட்டாலும், அதில் உள்ள சாராம்சத்தை வேறுவடிவில் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்’ என்று அதே நட்வர்சிங் கொழும்புவில் சொன்னார்.
இலங்கை விமானப் படைத் துணைத் தளபதி டொமினிக் பெனரா, ''யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானத் தளமும் ஓடுதளமும் இந்தியப் பொருளாதார உதவியோடு கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கப்பட்டு வருகிறது'' என்று (2005-டிசம்பர்) அறிவித்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் கங்காணி வேலைகள் வெளியில் வர ஆரம்பித்தன. இவர்கள் மறைமுகமாகச் செய்து கொடுத்தது அனைத்தையும் இலங்கை வெளிப்படையாக கொழும்புவில் அறிவித்துக்கொண்டே இருந்தது. ராடார் கொடுத்தனர். போர் ஹெலிகாப்டர்களைக் கொடுத்தனர். இவர்கள் ஆயுதங்கள் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்துக்குப் (2006) பிறகுதான், அங்கு மக்கள் படுகொலைகள் அதிகமாக அரங்கேற ஆரம்பித்தன. செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது விமானம் குண்டுகள் போட்டு 61 குழந்தைகள் சாவில் இருந்துதான், ஈழத்தின் நான்காவது போர் தொடங்குகிறது. இலங்கையின் கடற்படைக் கப்பலில் இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததாக கொழும்பு பத்திரிகைகள் மகிழ்ச்சியுடன் செய்திகளை வெளியிட்டன. இந்தப் போரை நடத்துவதற்காக இலங்கை தரப்பில் பஷில், கோத்தபய, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியத் தரப்பில் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு இருக்கும் தகவலும் கொழும்பில் இருந்து கசிந்தது. இலங்கையின் பாதுகாப்பு அம்சங்கள், எல்.டி.டி.இ-க்கு எதிரான ராணுவத் தாக்குதல் ஆகியவை பற்றி விவாதம் செய்ததாக, இலங்கை அரசின் செய்திக் குறிப்பே ஒப்புக்கொண்டது. இந்தச் செய்திகள் அரசல்புரசலாகக் கசிய ஆரம்பிக்கும்போது புலிகள் எதிர் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.
வன்னிப் பகுதியில், சிங்கள ராணுவத்தின் தலைமையகத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரௌட் ஆகிய இருவர் படுகாயம் அடைந்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் ராணுவ உதவி முழுமையாக அம்பலத்துக்கு வந்தது. இதுவரை இலங்கை அரசாங்கத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பூசி மெழுகிவந்த மன்மோகன் சிங், முதன்முதலாக வைகோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ''இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இத்தகைய பாதுகாப்பு உதவிகளைச் செய்திருக்கிறோம்'' என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 'நாம் இந்த உதவிகளைச் செய்யாவிட்டால், பாகிஸ்தானும் சீனாவும் அந்த உதவிகளைச் செய்துவிடுவார்கள்'' என்பதும் இவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது. ''எவனோ கொலை பண்ணப் போறான்... யாருக்கோ பணம் கிடைக்கப்போகிறது. அந்தக் கொலையை நாமே செய்து பணத்தை வாங்கிக்கலாமே?'' என்று கூலிப்படைக்காரன் கேட்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அந்தப் பொருளாதார மேதைதான் சொல்ல வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவித் தமிழ் இனத்தையே பூண்டோடு சுட்டுப் பொசுக்கி வருகிறார்கள் என்பது அப்போது மன்மோகனுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால், ''இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதில் இந்திய அரசுக்கு உடன்பாடே கிடையாது'' என்று சரத் பொன்சேகா சொல்லியபோது மறுத்திருக்க வேண்டும். ''இந்தியா கொடுத்த ஹெலிகாப்டர்கள்தான் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தன'' என்று இலங்கை ராணுவத்தினர் பேட்டிகள் கொடுத்தனர். இதை எல்லாம்விடக் கொடூரமான தகவல் என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ''இந்தியத் தரப்பு, குடியரசுத் தலைவர் ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது. இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. இந்தத் தகவலை அந்த நாட்டு ராணுவத்தினர் கூறினர்'' என்கிறார் அவர்.
அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு.... மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.
இவருக்குக் கிடைத்த சரியான பஃபூன் அமைச்சர், சல்மான் குர்ஷித். ''மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரத்தில் குறுக்கிட்டு ஒரு தரகராகச் செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது'' என்று புத்திசாலித்தனமாய் பதில் சொல்லி இருக்கிறார். இலங்கையில் தனிநாடு கேட்டு சண்டை போட்ட போராளி அமைப்புகளை இங்கு வரவழைத்து டேராடூனில் ஆயுதப் பயிற்சி கொடுத்தது சோனியாவின் மாமியார். இலங்கைத் தமிழர்களின் தரகராக மாறி ஜெயவர்த்தனாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் சோனியாவின் கணவர். இந்த வரலாறுகளை அந்தச் சட்டப் புலி மறைக்க நினைக்கிறார்.
கையில் ஆயுதம் வைத்திருந்த ஈழத் தமிழர்களைப் பற்றி மன்மோகனும் குர்ஷித்தும் கவலைப்பட வேண்டாம். கையில் மீன் வைத்திருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் இதுவரை சுமார் 400 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்களே.... 'இனி ஒரு மீனவன் வீட்டில் இழவு விழுந்தாலும் பொறுக்க மாட்டோம்’ என்று சொல்ல மன்மோகன், சோனியா, குர்ஷித் ஆகியோர் தயாரா? ராமேஸ்வரமும் தூத்துக்குடியும் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது. ஈழத் தமிழன் கொலைக்கு உதவிகள் செய்து, இந்தியன் கொலையையும் வேடிக்கை பார்ப்பார்கள் என்றால், இதயம் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு என்ன இருக்கிறது?
''பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்க்கிறோம். உலகத்துக்கும் எங்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் போக்குகளை எப்போதும் எதிர்ப்போம்'' - இதுதான் பண்டித நேரு, இந்தியாவுக்கு எழுதிவைத்த வெளியுறவுக் கொள்கை.
ஸ்வீடன் போபர்ஸில் கமிஷன் வாங்கி, ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் போட்டு, இத்தாலியக் கம்பெனிகளிடம் ஹெலிகாப்டர் பணம் வெட்டி, ஸ்பெக்ட்ரம் பங்குகளை துபாய் வரைக்கும் விற்றுக் கொள்ளை லாபம் அடைவதுதானோ இன்றைய வெளியுறவுக் கொள்கை?



(ஜுனியர் விகடனிலிருந்து............)

Related links:--



No comments:

Post a Comment