Wednesday, March 6, 2013

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த எண்ணுகிறார் கருணாநிதி: வைகோ


பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி எண்ணுகிறார்; அதனால் மார்ச் 12ல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப்படுகொலையும், அம்மக்களுக்குத் தொடரும் விவரிக்க இயலாத துன்பங்களும், மனிதகுலத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றன. இளந்தளிர் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை, தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் இதயத்தைப் பதறச் செய்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டில் இருந்தே, சிங்கள அரசுக்கு, முப்படை ஆயுதங்களைக் கொடுத்தும், இந்தியத் தளபதிகளை அனுப்பி ஆலோசனை தந்து,மிக நவீனமான ரடார் உள்ளிட்ட போர்ச்சாதனங்களை வழங்கி, யுத்தத்தை இயக்கியது.அதனால்தான், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகின் பல நாடுகள் போரை நிறுத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்தியும், இந்திய அரசு ஒப்புக்குக் கூட, யுத்த நிறுத்தத்தைக் கோரவில்லை. மாறாக, ‘அது எங்கள் வேலை அல்ல’ என்று, திமிராகக் கூறியது. அந்த மத்திய அரசில் பதவிகளை அனுபவித்துக் கொண்டே, ‘மைய அரசின் கொள்கைதான் இதில் எங்கள் கொள்கை’ என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், அதே மே மாத இறுதியில், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், சிங்கள அரசைப் பாராட்டி, அக்கிரமமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ததில், இந்திய அரசு முக்கியப் பங்கு வகித்தது.
கடந்த ஆண்டு, மனித உரிமைக் கவுன்சிலில், அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கையின் சிங்கள அரசாங்கம், உலகத்தை ஏமாற்றுவதற்காக மோசடியாக அறிவித்த, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் - எல்எல்ஆர்சி என்ற ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஏமாற்று வேலைக்குத்தான் வழி வகுத்தது.
2010 ஆம் ஆண்டு, ஐ.நா. அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிக்க, பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், 2013 பிப்ரவரி 11 ஆம் நாள் தாக்கல் செய்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து, உலகம் அறிவதற்கு சுதந்திரமான புலன் ஆய்வு விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும்; அங்கு நடந்தது வெறும் போர்க்குற்றம் அல்ல; சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்த தமிழ் இனப்படுகொலை ஆகும்; இந்த இனக்கொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டுப் புலன் ஆய்வு விசாரணை நடத்த, ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானிக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு என்பது, சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைவது மட்டும்தான்; தீர்வு ஆகும். அதற்கான விடியலை நோக்கித்தான், உலகெங்கும் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், குரல் எழுப்பவும் போராடவும் வேண்டும்.
2009 ஆம் ஆண்டு, வீரத்தியாகி முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட ஜனவரி 31 ஆம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம் மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும், இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாதபாடுபட்ட, அன்றைய முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி,  இப்போது, மார்ச் 12 இல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளார்.
அமெரிக்கா கொண்டு வருகின்ற ஆதரித்து பொது வேலை நிறுத்தம் என்கிறார்.
அமெரிக்கா கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படும் தீர்மானத்தில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற சொல்லோ கருத்தோ அறவே கிடையாது;
இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்ற வாசகமும் கிடையாது. சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கையும் கிடையாது;
முதலில் வெளிவந்த தீர்மானத்தில் இருந்த சித்திரவதை என்ற சொல்லைக் கூட, பின்னர் அமெரிக்கா நீக்கி விட்டது.
மனித உரிமை ஆர்வலர்களும், சுதந்திரமான நீதித்துறை குறித்த ஆய்வாளர்களும், பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, மக்கள் காணாமல் போதல், சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்கிறவர்களும், இலங்கைக்குள் தாராளமாகச் செல்வதற்குக் கேட்கும் வேண்டுகோள்களைப் பரிசீலிப்பது குறித்து, சிங்கள அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தோடு ஆலோசித்து, அதன் ஒப்புதலோடுதான், மனித உரிமை ஆணையர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இலங்கை அரசு அமைத்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்கிறது. 
அதுமட்டும் அல்ல, மனித உரிமைகள் ஆணையர் இதுபற்றிய அறிக்கையை, மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
நம் தொப்புள் கொடி உறவுகள் ஆன ஈழத்தமிழர்களின் குழந்தைகள், தாய்மார்கள், ஆயுதம் ஏந்தாத, போரில் ஈடுபடாத பொதுமக்கள் என இலட்சக்கணக்கில் படுகொலை செய்த சிங்கள அரசு, உலகத்தை ஏமாற்றுகின்ற மாய்மால வேலைகளுக்கு உடந்தையாக, இந்தியாவின் மத்திய அரசு இன்றுவரை செயல்பட்டு வருவதற்கு, அசைக்க முடியாத ஆதாரங்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன.
2008-09 இல், ஈழத்தமிழர் படுகொலைக்கு, முழுக்க முழுக்க உடந்தையாக இருந்து செயல்பட்ட இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், ஈழத்தமிழரைக் காக்கவும், முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தபோது, தமிழகத்தில் பிரளயமென எழ வேண்டிய கொந்தளிப்பைத் தடுப்பதற்கு, என்னென்ன சூழ்ச்சிகள் தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டதோ, அதே வேலைதான் இப்போதும் நடக்கிறது.
கொலைகார ராஜபக்சேவை, நேற்றுவரை இந்தியாவுக்கு வரவழைத்து விருந்து வைத்துப் பாராட்டி, உலகத்தின் கண்களில் இந்தியாவின் காங்கிரஸ் அரசு மண்ணைத் தூவுகிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும்கூட, இந்திய அரசு இலங்கையோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டே வருகிறது.
தமிழக மீனவர்கள் 500 பேர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அதனைத் தடுக்கத் தவறிய இந்திய அரசு, எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்காமல், இலங்கைக் கடற்படையோடு ஒப்பந்தமும் போட்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக, சிங்கள அரசின் மீது, நியாயமான ஆத்திரமும், தமிழர்கள் குறித்த வேதனையும், வேகமாக வளர்ந்து வருவதால், நீதிக்கான பாதைக்கு வழிகாட்டாமல், மக்களைத் திசைதிருப்புகின்ற முயற்சியில், இந்தியாவின் காங்கிரஸ் அரசு, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வைப் பயன்படுத்துகிறது.
அமெரிக்கத் தீர்மானம் என்பது, தமிழர்களுக்கு நீதிக்கு வழி அமைக்கும் தீர்மானம் அல்ல.
ஈழத்தமிழர் இனக்கொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் ஆய்வு விசாரணை நடைபெற, மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று, அதன் உறுப்பு நாடுகளான, 47 நாடுகளின் அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து இருந்தோம். அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதற்குத்தான், தமிழக மக்களும், உலகு வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒருமித்து எழ வேண்டும்.
இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மாவீரர்களும், விடுதலைப்புலிகளும், இரத்தத்தைச் சிந்தி, உயிர்களைத் தந்ததெல்லாம் சிங்களவனோடு அடிமை வாழ்க்கை நடத்த அல்ல. உரிமைகளுக்காக அவனிடம் பிச்சை கேட்டு, அவனது ஆதிக்கத்தில் வாழ்வதற்காக அல்ல.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களவன் வெளியேற்றப்பட்டு, சிறைகளில் வதைபடும் தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, போலீசும், இராணுவமும் அகற்றப்பட்டு, உலக நாடுகள் மேற்பார்வையில், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்திடச் செய்வது ஒன்றுதான், ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான நீதியை வழங்கும் என்பதை, எள் அளவும் மலிவான அரசியல் லாப நோக்கம் இன்றி, தன்னலம் அற்ற கடமை உணர்வோடு, தமிழக மக்களின் மேலான கவனத்துக்குத் தெரிவிக்கின்றேன்.
- என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment