Thursday, March 3, 2011

காத்திருப்பு தேவையில்லை



இதுவரை இந்தியாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் எதிலுமே முடிவு தெரிவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை.  இந்த முறை அத்தகைய நிலைமை நான்கு மாநிலங்களில் திணிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற நாளுக்குப் பிறகு ஒருநாள் ஓய்வு நாளாகவும், அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளாகவும் அறிவிப்பதுதான் வழக்கமாக இருந்தது. இந்த ஒருநாள் இடைவெளியும்கூட, வாக்குப்பெட்டிகள் பல்வேறு முனைகளிலிருந்து அந்தத் தொகுதியின் நடுவே இருக்கும் ஓர் ஊரில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு வந்து சேர்வதற்கான கால அவகாசம்தான்.
இருப்பினும் இந்த இடைவெளி கடந்தகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் 2 நாள்களாக அதிகரித்தது. 2001-ல் மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு  எண்ணிக்கையும் நடைபெற்றது. மே 13 வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது அ.தி.மு.க.  வெற்றி பெற்றது. அடுத்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மே 8-ம் தேதி வாக்குப்பதிவும், மே 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. தி.மு.க. வெற்றி பெற்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய  தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துவிடுகிறது. ஆனால், இந்த நான்கு  மாநிலங்களும் மே 13-ம் தேதி வரை, அதாவது ஒரு மாத காலத்துக்கு, மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியும்வரை வாக்கு எண்ணி முடிவு தெரியக் காத்திருக்க வேண்டும் என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் வழக்கமாக மே 2-வது வாரத்தில் நடத்தப்படும்  சட்டப்பேரவைத் தேர்தலை  ஒரு மாதம் முன்கூட்டியே நடத்துவதால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வாக்குப்பதிவுக்கு முன்கூட்டியே முடிந்துவிடுகின்றன என்றாலும், பிரசார ஓசைகளிலிருந்து இந்த மாணவர்கள் தப்பிக்கவா முடியும்? ஒருபுறம் ஏப்ரல் 2 வரை நடக்கும் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி. இன்னொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம். இதற்கிடையில்தான் மாணவர்கள் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும். நாளைய தலைமுறையின் பிரச்னை பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் ஆணையம் அவசரஅவசரமாகத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டிய அவசியம் என்ன? முடிவுகளை ஒரு மாதம் தள்ளிப்போட வேண்டிய நிர்பந்தம்தான் என்ன?
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேதியில், ஒரே நாளில் அல்லது பல கட்டங்களில் வாக்குப் பதிவை நடத்த முடியும் என்றால், வாக்கு எண்ணிக்கையை மட்டும் ஏன் ஒரே நாளில் நடத்த வேண்டும்? அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வாக்கு எண்ணிக்கைத் தேதியை நிர்ணயிப்பதில் என்ன தவறு? இதில் நடைமுறைச் சிக்கல் என்ன?
மக்களவைத் தேர்தல் நடத்தப்படும்போது, தேர்தல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில், வாக்கு எண்ணிக்கையை ஒரே நாளில் நடத்துவதுதான் சரியானது. ஏனென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் அதிகமான வெற்றி அல்லது அதுபற்றி தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மற்றொரு மாநிலத்திலும் வாக்காளர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிபெறும் கட்சிக்கே தங்கள் வாக்கு என்ற மனநிலையை உருவாக்கும் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் அந்தந்த மாநிலத்தோடு மட்டுமே தொடர்புடையவை. தமிழ்நாட்டில் ஏற்படும் வெற்றி, தோல்வி எதுவுமே மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 6 கட்டத் தேர்தல் முடியும் வரை, வாக்கு எண்ணிக்கை மற்ற 4 மாநிலங்களிலும் ஒரு மாத காலம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமா? வேண்டுமானால் கேரளத் தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்திக் கொள்ளலாமே, யார் வேண்டாம் என்று தடுத்தது? இதுபோன்று 30 நாள் இடைவெளி தருவதால் தேவையில்லாத பிரச்னைகளுக்குத் தேர்தல் ஆணையம் வழி வகுக்கிறது.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் அந்த மாநிலத்தில் யாருக்கு வெற்றி என்று ஊடகங்களும் தனியார் அமைப்புகளும் தேர்தல் கணிப்புகளை  வெளியிடும்.  இந்த முடிவுகள் காபந்து அரசில் இருக்கும் கட்சிக்கு எதிரானதாக இருக்குமெனில், தோல்வியடையக்கூடிய தொகுதிகளில் சில நூறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையே மாற்றி வைப்பது இயலாத ஒன்றா? அதிலும், அவர்களுக்குப் பிடித்தமான அதிகாரிகளையே தேர்தல் அலுவலர்களாக இருக்கும்படி செய்திருப்பின், இது மிகவும் எளிதாயிற்றே!
கணினியில் வாக்குப்பதிவு அடையாள ரசீதுகள் கிடைக்க வகை செய்யப்பட்டு, அந்த ரசீதுகள்  தனிப்பெட்டியில் சேகரித்து வைக்க வகை செய்யப்பட்டிருந்தாலும், இத்தகைய நீண்ட இடைவெளியில் முறைகேடுகள் நடந்தாலும், ரசீது எண்ணிக்கை மூலம் சரிபார்க்க ஒரு வாய்ப்பாகிலும் இருக்கும். அதற்கும் இப்போது வழியில்லாத நிலையில் 30 நாள் இடைவெளி தேவைதானா? போதாக்குறைக்கு, 30 நாள்களும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவது என்பது தேவையற்ற வேலை. பொருள்செலவு தருவதும்கூட.
மேற்கு வங்க மாநிலம் தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களிலும் இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வகை செய்ய வேண்டும். அல்லது முதலில் மேற்கு வங்கத்தில் தேர்தலை நடத்திவிட்டு, ஏனைய நான்கு மாநிலங்களுக்கான தேர்தலை மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தி எல்லா முடிவுகளையும் ஒரே நாளில் அறிவிக்கட்டுமே, யார் வேண்டாம் என்று தடுத்தது?
இந்தச் சிக்கலை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீதிமன்றத்தை அணுகினாலும் தவறில்லை. காலமொன்றும் கடந்துவிடவில்லை. தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்னையில் மறுபரிசீலனை மேற்கொண்டு தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அடம்பிடிக்காமல் 
நடைமுறைச் சிந்தனையுடன் ஆணையம் செயல்பட்டால் நல்லது.

க‌ட‌ந்த‌ நாடுளும‌ன்ற‌ தேர்த‌லில் போது த‌மிழ‌க‌த்தினல்,
ஒருவ‌ர் தோற்ற‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு பின்பு அவ‌ர்
வெற்றி பெற்ற‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார் என்ப‌து
குறிப்பிட‌த்த‌க்க்து.

இப்போது அவ‌ர் ம‌த்திய‌ அமைச்ச‌ராக‌ உள்ளார் என்ப‌து வேறு விஷிய‌ம்

No comments:

Post a Comment