Friday, March 4, 2011
பி.ஜே. தாமஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸின் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நீதி நிலைதடுமாறாமல் காத்திருக்கிறது. முதலில் பி.ஜே. தாமஸ் தன்மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது; அந்த நியமனம் விவாதப் பொருளான பிறகாவது, நிலைமையை உணர்ந்து தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றும் வகையில் பதவி விலகி இருக்க வேண்டும். இரண்டையும் செய்யாததால் இப்போது அவமானத்துடன் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்திருக்கும் தீர்ப்பில் பல முக்கியமான பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டு, இனி வரப்போகும் காலங்களில் தவறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமûஸ நியமனம் செய்த பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் செயல்பாடு பற்றியும் நீதிபதிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக இருந்தபோது பி.ஜே. தாமஸ், தனது துறையில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டவர். அவரைத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிப்பது என்பது நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் விடுக்கப்படும் சவால் என்று எழுந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு, திருடன் கையில் சாவியைக் கொடுப்பதுபோல, பி.ஜே. தாமûஸத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக்கியது. அதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கண்டித்திருக்கிறது. தனது 71-பக்கத் தீர்ப்பில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, முதலில் நிராகரித்திருப்பது, இந்த நியமனத்தை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்கிற அரசின் வாதத்தை. முறைகேடான அரசியல் சட்ட நியமனங்களைக் கேள்வி கேட்கவோ, நிராகரிக்கவோ உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்திருப்பதன் மூலம், இனி தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமைத் தகவல் ஆணையம், மத்தியப் புலனாய்வுத் துறை, தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் "இன்டக்ரிட்டி கமிஷன்' என்கிற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நேர்மையையும் நாணயத்தையும் அரசின் செயல்பாடுகளில் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் சட்ட நியமனங்களில் அப்பழுக்கற்றவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் உயர்மட்டக் குழு நியமிக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பி.ஜே. தாமஸின் பின்னணி பற்றிக் கவலையேபடாமல், எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழு செயல்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது. ""தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்கிற அரசியல்சட்ட நியமனப் பதவியின் கௌரவத்தையும், முக்கியத்துவத்தையும் மனதில்கொண்டு உயர்மட்டக் குழு அந்தப் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அந்த நபரின் நிர்வாகத் தகுதியை மட்டுமே கருத்தில்கொண்டு முடிவெடுக்க முடியாது'' என்கிற உச்ச நீதிமன்றத்தின் பார்வை குறிப்பிடத்தக்கது. மூன்று பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவின் பெரும்பான்மை பலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட முடியாது என்றும், ஒரு நியமனத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவிக்கப்பட்டால் அந்தக் கருத்து ஏன் நிராகரிக்கப்பட்டது என்கிற காரணம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு கருத்தும் அரசின் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற பதவிகளுக்கு அரசு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சமுதாயத்தில் அப்பழுக்கற்ற தொண்டாற்றுபவர்களும், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களும், நேர்மையாளர்களும் ஏன் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து. இதுபோன்ற பதவிகள் நேர்மையை நிலைநாட்டுவதிலும் ஊழலைத் தடுப்பதிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பதால், தங்களுடன் வேலைபார்த்த சக அதிகாரிகள் மீதும், தங்களுக்கு ஆதரவும் பதவி உயர்வும் தந்த அரசியல்வாதிகள்மீதும் அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயலாது என்பதில் சந்தேகம் கிடையாது. அதிகாரவர்க்கத்தில் இல்லாதவர்களும் நியமிக்கப்படலாம் என்பதுடன், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதாகத்தான் இருக்கும். பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று மூன்று பேர்கள் அடங்கிய குழுவின் முடிவுகள் தாமஸின் நியமனம்போல அரசுக்கு நெருக்கமான அதிகாரிகளின் நியமனத்தில்தான் முடியும். அதனால் உயர்மட்டக் குழு விரிவுபடுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தகவல் ஆணையர், கணக்குத் தணிக்கை ஆணையர், புலனாய்வுத்துறை இயக்குநர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகிய பதவிகளில் உள்ளவர்களையும், பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக்கி, இதுபோன்ற பதவிகளுக்கான நியமனங்களைப் பரிசீலித்தால், தவறுகள் நேராமல் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment