Sunday, April 8, 2012

ஆடாத ஆட்டம் ஏன்...?

மின் தட்டுப்பாடு, தேர்வு நேரம் பார்த்து கிரிக்கெட்டை துவக்கி விட்டனர். இன்று, பன்றிக் காய்ச்சலை விட, கிரிக்கெட் காய்ச்சல் தான் கடுமையாக இருக்கும் போலும்! இந்த, "காய்ச்சலால்' பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் மட்டுமில்லாமல், தங்களுடன் இருப்பவர்களையும், படுத்திஎடுத்துவிடுவர். "ஸ்கோர்' என்ற வார்த்தையை குத்தீட்டியாக பயன்படுத்தி, குத்தி எடுத்துவிடுவர். முன்னதிற்காவது மருந்து, மாத்திரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உண்டு; பின்னதிற்கு அதெல்லாம் கிடையாது.
அலுவலகங்களில், கேன்டீனில், வீடுகளில் இது பற்றி பேசினால் கூட, தாங்கிக் கொள்ளலாம். ஆனால், வழிபாடு செய்யுமிடங்களிலும், துக்கவீடுகளிலும் கூட, இது பற்றியே பேசுவதைத் தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நிற்பதுவும், நடப்பதுவும், பேசுவதும் அவ்வளவு, ஏன் சுவாசிப்பதும் கூட பலருக்கு, கிரிக்கெட் என்றாகிவிட்டது. "ஸ்கோர்' கேட்கும் போது, தெரியாமல் விழித்தாலோ அல்லது சிரித்தாலோ, "இது கூட தெரியாமல் இருக்கிறானே' என, வேற்றுக் கிரகத்தில் இருந்து இறங்கி வந்த, "ஜந்து'வைப் போல பார்ப்பர். வேலைக்கு போகமாட்டார்கள் அல்லது வேலைக்கு போன இடத்தில், கிரிக்கெட் பார்ப்பதையே வேலையாக கொண்டு இருப்பர்.  எதிர்காலத்தை தீர்மானிக்கும், முக்கியமான தேர்வை சந்திக்கும் மாணவ மணிகள், கண்களை புத்தகத்திலும், மனதை அக்கம் பக்கம் இரைச்சலோடு ஓடிக்கொண்டு இருக்கும், "டிவி' க்கும் கொடுத்து, இப்போது என்னவாகியிருக்கும் என்று மனதை அலைபாயவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். படிக்கும் புத்தகங்களில், அவர்களையும் மீறி தோனியும், ரெய்னாவும், சச்சினும்தான் வருகின்றனர்; பெற்றோருக்கோ, மதிப்பெண் பட்டியல் தான் கண்முன் தோன்றி பயமுறுத்துகிறது.
அரை குறை ஆடையுடன், ஒரு நாள் முன்னதாகவே கூடுதல் காசு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட துவக்கவிழா ஆட்டம், கண்களை கூசச் செய்துவிட்டது. கிராமங்களில், கோவில் திருவிழாக்களில், ரிக்கார்டு டான்ஸ் என்ற பெயரில், ஆபாச நடனம் ஆடக்கூடாது என்பதில், தீவிரமாக இருக்கும் அரசு, அதைவிட மோசமாக நடந்த இந்த நடன நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. "சியர்ஸ் கேர்ள்ஸ்' என்ற பெயரில், துண்டு துணியுடன் வெளிநாட்டு பெண்களை, சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் மோசமான அசைவுகளுடன் அரங்கத்தின் மையத்தில் ஆடவிடுகின்றனர். வறுமை கொடுமையால், அன்றாடம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அதிகரித்து வரும் நம் ஏழை இந்தியாவில், குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படும், ஆயிரக்கணக்கான எளிய மக்கள் நிறைந்த எளிய தேசத்தில், ஏன் இப்படி கிரிக்கெட்டை திருவிழா போல கொண்டாடி, மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கின்றனர் என்பது தான் தெரியவில்லை. நாட்டில் உள்ள சகல விளையாட்டையும், உருத்தெரியாமல் அழித்து புண்ணியம் கட்டிக்கொண்ட விளையாட்டு, நம் நாட்டில் இதுவாகத்தான் இருக்கும். ஹாக்கியில் கோப்பையை பெற்றவர்கள், கடன் வாங்கிக் கொண்டுதான், ஊர் திரும்ப வேண்டியிருக்கிறது.
கபடியில் பதக்கம் வென்றவர்கள், கைகாசு போட்டுத் தான் விளையாடும் ஆடையே வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு... எதைச் செய்தாலும் அது லட்சங்களிலும், கோடிகளிலும்தான் போய் நிற்கிறது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள அத்தனை தாய்மார்களும், தங்கள் பிள்ளை சச்சினாக வேண்டும் என்று, பயிற்சி முகாம்களில் பணத்தை கொட்டுகின்றனர். அல்லும், பகலும் இதே நினைவாக பைத்தியம் பிடித்தது போலாகி விடுகின்றனர். எல்லாரும் சச்சினாக முடியாது என்ற எதார்த்தத்தை, ஏன் உணர மறுக்கின்றனரோ! அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில், கிரிக்கெட் விளையாடுவது இல்லை. அவ்வளவு ஏன்... கிரிக்கெட்டை பெற்றெடுத்து வளர்த்த, இங்கிலாந்தில் கூட, இந்த விளையாட்டுக்கு இன்னமும் போதிய ஆதரவு இல்லை. இப்படி உலகிலுள்ள, 192 நாடுகளில், 182 நாடுகளால், கைவிடப்பட்ட விளையாட்டுதான் கிரிக்கெட்! விளையாடும், 10 நாடுகளிலும், கென்யா போன்ற நாடுகள் உப்புக்கு சப்பாணி நாடுகள். தோற்பதற்காகவும், ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகவும், அணியில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள். இப்படி கூட்டிக்கழித்து பார்த்தால், மிச்சமிருக்கும் ஐந்து நாட்டின் வீரர்களைத் தான், ஆளாளுக்கு ஏலம் எடுத்து, விளையாட விடுகின்றனர்.

ஒன்று மட்டும் நிச்சயம்... இங்கே விளையாட்டுக்கு பயன்படுவது பந்து அல்ல; பணம் தான்! விளையாடுபவர்களும், விளையாட்டை நடத்துபவர்களும் ஒவ்வொரு நொடியையும், பணம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஐந்து நாள் போட்டி என்று அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். ஒரு நாள் போட்டி என்று வெயிலில் வாட வேண்டாம். நாட்டிற்காக விளையாடுகிறோம் என்று பம்மாத்து செய்ய வேண்டாம். சும்மா, ஜாலியாக கலந்து கொண்டு, பைசா பார்த்துவிட்டு போகலாம். நம் ரசிகன்தான் பாவம். நொடிக்கு நொடி பரபரப்பாகி இதய நோய்க்கு உள்ளாகிறான்! இந்த சீசனில் மட்டும், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும், தலா 16 போட்டிகளில் கலந்து கொண்டு, 48 மணிநேரம் மைதானத்தில் இருப்பர். ஒவ்வொரு நிமிடமும், ஒரு வீரர், 1,200 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது எனில், 48 மணி நேரத்தை நிமிடங்களில் பெருக்கி கூட்டிப்பாருங்கள்... மயக்கமே வரும்! இதனால், சச்சின் இன்னும் ரிட்டயராகாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். "விளையாடியது போதும், ஓய்வு எடுங்கள்' என்ற, இந்த விஷயத்தில், இவர் பேச்சை இவரே கேட்கமாட்டார் போலும். ஒரு வேளை மனிதருக்கு உள்ள ஆயிரக்கணக்கான அசையும், அசையா சொத்துக்களை தாண்டி, கடன் ஏதும் இருந்து அதை அடைக்க விளையாடுகிறாரோ என்னவோ!
கபடி, ஹாக்கி என்பதெல்லாம் இந்திய அணி. ஆனால், கிரிக்கெட் என்பது இந்திய அணி அல்ல; அது தனியார் அமைப்பிற்கு கட்டுப்பட்டது. இந்த அணியால் இந்தியாவிற்கு பைசா வருமானம் கிடையாது. "தேர்தல் நேரம் பாதுகாப்பு கொடுப்பது கொஞ்சம் சிரமம்; விளையாடும் தேதியை தள்ளிப்போடுங்கள்' என்று சொன்னதற்கு, தென்னாப்பிரிக்காவில் போய் விளையாடி நாட்டின் மீதான, அளப்பரிய பாசம் மற்றும் நேசத்தை வெளிப்படுத்தியவர்கள்தான் இவர்கள்! இவர்களிடம் போய், "நாட்டில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளில் படிக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான ஆபரேஷன்கள் மின்சாரம் இல்லாமல் தள்ளிப்போடப்படுகிறது. பிரசவம் போன்றவை மெழுகுவத்தி வெளிச்சத்தில் நடக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்து மின்சார நிலமை சரியான பிறகு விளையாடுங்கள்' என்று சொன்னால் மட்டும் கேட்கவா போகின்றனர்? "இல்லையில்லை, இப்போது ஜெயிக்காவிட்டால், பிறகு எப்போதுமே ஜெயிக்கமுடியாது' என்று சொல்லும் அணி எதுவும் உண்டா... கிடையாது. நினைவு தெரிந்த நாள் முதல், ஒரு ஊரில் தோற்பதும், மறுநாள் அடுத்த ஊரில் ஜெயிப்பதும், அதற்கு மறுநாள் இன்னொரு ஊரில் தோற்பதும் தானே நடக்கிறது. இப்படி ஊர் ஊராக போய் தோற்பதை, ஒரு இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தால் என்ன தப்பு? இன்னும் சொல்லப்போனால், உங்களது வெற்றியோ, தோல்வியோ உங்களால் நிர்ணயிக்கப் படவில்லை என்பதை ஒரு சில மாதம் கழித்து, எப்படியும் ஒரு ஊடகம் அம்பலப்படுத்தும். அதற்குள், தம் கல்லாவை நிரப்பிவிடுவர்.

கிரிக்கெட்டிற்கு எதிரான புலம்பலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். நம் நாட்டில் கிரிக்கெட்டையும், வீரர்களையும் உயிராக மதிக்கும் இந்த சமூகத்தின் மீது, கொஞ்சமேனும் அக்கறைகாட்டுங்கள்.....

No comments:

Post a Comment