"" பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதே போலீசின் முக்கிய கடமை. அதன் பின்புதான் எங்கள் பாதுகாப்பு. பொதுமக்களைக் காக்கவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது,'' என்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த 22ம் தேதி நள்ளிரவு நடந்த, கொள்ளையர்கள் என்கவுன்டர் விவகாரம் அனைவரையும் போலீஸ் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. கொள்ளையடித்தவர்களுக்கு இந்த தண்டனையா? என்று ஒருபக்கம் கேள்வி எழுப்பப்பட்டாலும், பொதுமக்களைக் காப்பாற்ற நடந்த விஷயம்; உள்நோக்கம் கிடையாது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடந்த சம்பவம் குறித்த சில சந்தேகங்களுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி அளித்த பதில் :என்கவுன்டர் விவகாரத்தில் எந்த நேரத்தில் தகவல் கிடைத்தது, சம்பவம் நடந்த நேரம் குறித்த சர்ச்சைகள் கிளம்புகிறதே?பொதுவாகத் தகவல் கிடைத்தவுடன் நாங்கள் முதலில் அந்தத் தகவல் உண்மைதானா என்பதைப் பார்க்க வேண்டும். விசாரித்த பின்புதான், நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்தச் சம்பவத்தில், அவர்கள் அங்குஇருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தோம். எங்களுக்குத் தகவல் நள்ளிரவு 12 மணிக்குத் தான் வந்தது. அதைத் தெடர்ந்து தான் நாங்கள் ஆய்வுமேற்கொண்டு, தகவலை உறுதிப்படுத்தச் சென்றபோது தான் சம்பவம் நிகழ்ந்தது.என்கவுன்டர் சம்பவத்தில் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்த முடியாதவை என்று கூறப்படுகிறதே?முதலில், அவர்கள் பயன்படுத்தியது விளையாட்டுத் துப்பாக்கி என்று வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூறினர். ஆனால், இரண்டாவது கொள்ளையில் துப்பாக்கி வெடித்துள்ளது. தற்போது, கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம். அவை பயன்படுத்த முடியாதவையா, அல்லது எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, ஆயுதங்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் அறிக்கை வந்தால் தான் முடிவெடுக்க முடியும்.
சுட்டுக் கொல்லப்பட்டவன் கொள்ளையன் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?சுட்டுக் கொல்லப்பட்டவர்களை வங்கி அதிகாரிகள், மற்றும் வாகனங்கள் விற்பனை செய்தவர்கள் என அனைவரும் அடையாளம் காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற, ஆதாரங்களின் அடிப்படையில் தான் நாங்கள் பெயர்களை வெளியிட்டோம். அதில் ஒருவன் அடையாளம் தெரிந்துள்ளது. மற்றவர்கள் குறித்த அடையாளம் அறிய, போட்டோ மற்றும் கைரேகை பதிவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை போலீசார் பீகார் சென்றுள்ளனர். அங்குள்ள போலீசாரின் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அனைவரது அடையாளங்களும் தெரிந்துவிடும்.என்கவுன்டருக்கான அவசியம் ஏற்பட்டது எப்படி?பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவது தான் போலீசாரின் முதல் கடமை. அதை மேற்கொள்ளும்போது, போலீசார் தாக்கப்படுகின்றனர். அடுத்ததாக, போலீசார் தங்களை காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போலீசார் அங்கு செல்லும்போது, விசாரணை செய்யும் நோக்கம் இருந்ததே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்ற முடிவில் அவர்கள் இல்லை. முதலில் அவர்கள் சுட்டதால், சுற்றியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டனர்.அவர்கள் துப்பாக்கியால் சுடும்போது, அருகில் வீட்டில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி குண்டு பட்டிருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும். அதை தவிர்க்கவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது.
அடுத்தகட்ட விசாரணை?தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படும்போது, தற்போதுள்ள எப்.ஐ.ஆர்., அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணருவார்கள்.இவ்வாறு அவரது பதிலில் தெரிவித்தார்
No comments:
Post a Comment