ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா? எல்லாருக்கும் இந்தக் கேள்வி தான். "அதற்காக கொன்றுவிடுவதா? இவர்கள் தான் கொள்ளைகாரர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படியானால் சட்டம் எதற்கு?' என, துணைக் கேள்விகள் வேறு.
மனித உரிமைச் சங்கங்கள் அமைத்து, நேற்று வரை, முனைந்து செயல்பட வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, வாழைப் பழத்தைக்கொடுத்து, அதை உரித்தும் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது வேளச்சேரி, "என்கவுன்டர்' சம்பவம். "என்கவுன்டர்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, "எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நிற்றல்' என அர்த்தம் சொல்கிறது அகராதி. ஆனால், 10 ஆண்டுகளாக, "என்கவுன்டர்' என்ற சொல்லே போய், "போலி என்கவுன்டர்' என்பது தான் பிரபலமாகிவிட்டது. இந்த, "போலி என்கவுன்டரில்' இரண்டு வகை உண்டு. ஒன்று, எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகளை சுட்டுக் கொல்வது; இரண்டாவது, உண்மையான குற்றவாளிகளைக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காக சுட்டோம் எனக் கூறுவது.
வேளச்சேரி என்கவுன்டரைப் பொறுத்தவரை, முதல் குற்றச்சாட்டுக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், கொல்லப்பட்ட ஐந்து பேரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. நேரடி சாட்சிகள் இருக்கின்றன. பணத்தை இழந்த வங்கி மேலாளர்கள் மற்றும் வீடியோ வழங்கிய மேலாளர்களின் வாக்குமூலங்கள் இருக்கின்றன. இந்தப் பிரச்னையில், இரண்டாவது வகையான குற்றச்சாட்டுக்குத் தான் வாய்ப்பிருக்கிறது. குற்றவாளி என நன்றாகத் தெரிந்த பின், அவர்களை என்கவுன்டர் செய்து விடுவது, உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ள முறை தான். இதற்கு காரணம், கொலை வெறி இல்லை. மாறாக, பழைய குற்றவாளிகளுக்கு மட்டுமின்றி, அடுத்து குற்றம் செய்யப்போகிறவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
மேலும், முன்பெல்லாம் என்கவுன்டர் என்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் வீரதீர பிரதாபப் பட்டியலில் சேர்ந்து வந்தது. பதவி உயர்வும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இப்போது, அதெல்லாம் இல்லை. வழக்கும், விசாரணையும் தான் போலீஸ் அதிகாரிகளுக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. இது நன்கு தெரிந்தும், ஒரு என்கவுன்டருக்கு போலீசார் துணிவரா என்பது தான் அடிப்படைக் கேள்வி. அந்த விசாரணையும் கூட, போலீசாரால் நடத்தப்படுவதில்லை. மாஜிஸ்திரேட் மூலம் தான் நடத்தப்படுகிறது. "நீதித்துறை மீது நம்பிக்கையில்லாமல் சுட்டுக் கொல்கின்றனர்' என புகார் கூறுபவர்களுக்கு, அதே நீதித்துறையின் அங்கமான மாஜிஸ்திரேட்கள் மீது நம்பிக்கை இல்லையா? கொள்ளையர்களைப் பற்றி கவலைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் யாரும், அந்தப் பணத்தை இழந்த பொதுமக்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மனித உரிமை என்பதே, கிரிமினல்களுக்குத் தான் சொந்தம்; சிவிலியன்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல பேசுகின்றனர்.
இந்த என்கவுன்டரில் எழுப்பப்படும் சந்தேகங்களும், அவற்றுக்கான பதில்களும்:
* குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்லத்தான் நினைக்கின்றனர். அப்படியானால், போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவாவதே இல்லையா? கோர்ட்கள் காற்றாடுகின்றனவா?
* கொலையைச் செய்துவிட்டு, தற்காத்துக்கொள்வதற்காக இதைச் செய்ததாகக் கூறுகின்றனர். தற்காப்புக்காக நடந்தது தான் என எப்போது நம்புவர்? போலீசாரிலும் ஐந்து பேர் இறந்த பிறகா? எனில், கொள்ளையர்களின் உயிர் முக்கியம்; போலீசாரின் உயிர் துச்சமா?
* "வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா?' எனத் தெளிவாகக் கூறப்படவில்லை. போலீசார், ஆங்கிலத்தில் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி. கொள்ளையர்கள் வட மாநிலத்தவர்கள். காவல் துறையில் சிலருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். ஆனால், அதே கொள்ளையர்கள் உகாண்டாவையோ, ருவாண்டாவையோ சேர்ந்தவர்களாக இருந்தால், "துபாஷி' வரும் வரை காத்திருக்க வேண்டுமா?
* மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தது கொள்ளையர்கள் தானே தவிர, போலீசார் இல்லை. அவர்கள், அங்கு தங்கினர்; இவர்கள் அங்கு சென்றனர்.
* வீட்டில் இருந்த "டிவி' மற்றும் வாஷிங் மிஷினில் தோட்டா துளைத்ததற்கான தடயம் எதுவும் இல்லை. வேறு எங்கெங்கு எல்லாம் தோட்டா துளைத்திருந்தால், இதை ஒரிஜினல் என்கவுன்டர் என ஒப்புக்கொள்வர்? என்கவுன்டரில், கொள்ளையர்களின் உயிர் தான் குறியாக இருக்க முடியுமே தவிர, சுவரோ, "டிவி' மற்றும் வாஷிங் மிஷினோ அல்ல.
* சட்டத்தை போலீசார் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர். அந்தச் சட்டம் தானே போலீசாருக்கு துப்பாக்கியைக் கொடுத்திருக்கிறது; அவர்கள் ஒன்றும், அதை சட்ட விரோதமாக வைத்திருக்கவில்லையே.
* அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த முறை என்கவுன்டர் செய்யும் முன், அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரையும் எழுப்பிய பின் மேற்கொள்ளும்படி சொல்லலாமா? பஞ்சமாபாதகத்தையும் செய்ய அஞ்சாதவர்களிடம் கூட, போலீசார் கெஞ்சிக் கதறி தான் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, காலத்தின் கோலம்.
இருதலைக் கொள்ளி எறும்புகள்: என்கவுன்டரால் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்போதெல்லாம், என்கவுன்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து பிரச்னைகளும் நெருக்கடிகளும் தான் வருகின்றன. அவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தவறான நோக்கத்துக்காகவோ, தவறாகவோ நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், "சஸ்பெண்ட்' கூட செய்யப்படலாம்; கைதாக நேரலாம். கொள்ளையர்கள் தப்பிவிட்டால், சமூகத்திடம் கெட்ட பெயர் வாங்க நேரிடுகிறது. கொல்லப்பட்டால், சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்கின்றனர் போலீசார். மேலும், இதுவரை நடந்த என்கவுன்டர்கள் எதுவும், சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக நடந்தவை அல்ல. அனைத்துமே, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை. இந்தக் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தால், அவர்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து, மேலும் மேலும் நவீன ஆயுதங்கள், வாகனங்கள் வாங்கி, மேலும் மேலும் தொழில் விருத்தி செய்வர். அதைத் தான் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் விரும்புகின்றனரா? நல்லது செய்ய முயற்சிக்கும் போலீசார், இவ்வாறு தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளானால், மனதளவில் மிகவும் விரக்தியடைந்துவிடுவர். போலீசார் விரக்தியடைவது, ஒரு பாதுகாப்பான சமூகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment