சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியில்லை என்பது தெரிந்தும் மதிமுகவை "தோற்கடிக்க' வேண்டும் என்பதற்காகவே திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.
கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத மதிமுக, இந்த இடைத்தேர்தல் மூலம் "அரசியல் வாழ்வு' பெற்று விடக் கூடாது என்பதில் திமுக தலைமை தீவிரமாக இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.தமிழக அரசியல் களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி மட்டும்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர ஆளும் அதிமுக ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பணியை தொடங்கி விட்டது என்றே கூறலாம். அதனால் தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியது.2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணி நிலையில் மாற்றம், தேமுதிகவுடனான உறவில் விரிசல், தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தீர்க்க முடியாத மின்வெட்டுப் பிரச்னை போன்றவற்றால் இந்த இடைத்தேர்தலில் எவ்வித பின்னடைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அதிமுக தலைமை தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது.கடந்த திமுக ஆட்சியின்போது திருமங்கலம் இடைத்தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு அதன் பின்பு நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து வந்தது. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றால் தேர்தல் ஜனநாயகம் இல்லை என அக்கட்சித் தலைமையால் காரணம் கூறப்பட்டது.அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த அக்டோபரில் நடைபெற்ற திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வி அடைந்தது. எனவே, திருச்சி மேற்கு இடைத்தேர்தல் அனுபவத்தை கொண்டு சங்கரன்கோவில் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதியதாக கூறப்படுகிறது. அந்த கருத்து கட்சித் தலைமையை எட்டும் வகையில் பல மட்டங்களிலும் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்ததால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இது கட்சியின் பொதுச்செயலர் வைகோவையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியது.எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியல் களத்தில் தமது இருப்பை உணர்த்துவது என மதிமுக முடிவு செய்தது. அதற்காக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தீவிரமான தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி உண்டு.கடந்த 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மதிமுக சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் 21 ஆயிரம் வாக்குகளை பெற்றது.இப்போதைய இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தையாவது பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் மதிமுக தலைமை தீவிரமாக உள்ளது. அவ்வாறு நிரூபித்தால்தான் 2014 மக்களவைத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், கணிசமான தொகுதிகளைப் பெறவும் தளம் கிடைக்கும் என கருதுவதாகத் தெரிகிறது.திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்க மறுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறிய வைகோ, அதன் பின்பு திமுகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார்.எனினும், இரு தரப்புக்கும் இடையிலான "கசப்பு' மறைந்து விட்டதாக கருத இடமில்லை. எனவே, மதிமுகவின் அரசியல் வளர்ச்சியை திமுக ஒருபோதும் ஏற்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.இந்த சூழ்நிலையில், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடாவிட்டால் அது மதிமுகவுக்கு சாதகமாக அமையும். மதிமுக இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் அதன் "அரசியல் வாழ்வு' அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு நிலைப் பெற்று விடும். அது திமுகவுக்கு நல்லதல்ல என்பதோடு, அதற்கு திமுகவே வழிவகுத்து விடக் கூடாது என்பதில் அக்கட்சித் தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தைப் பெற்று, அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சி தான்தான் என்பதை நிரூபித்தது.அதேபோல், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றி உறுதியில்லை என்றாலும் இரண்டாவது இடத்தைப் பெற்று மதிமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதன் வெளிப்பாடே போட்டி முடிவு என்பது அக்கட்சியினரின் கருத்து.
No comments:
Post a Comment