சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஜெயிக்கப்போவது யாரு என்பதை விட, இரண்டாமிடம் யாருக்கு என்பது தான் பிரதான கேள்வியாக எழுந்துள்ளது. அந்த இடத்தைப் பிடிக்கும் கட்சியால், எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் சமன்பாடுகள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மார்ச் 18ம் தேதி நடக்கவுள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலை, தமிழகமே எதிர்நோக்கி உள்ளது. தன் எண்ணத்தை ஈடேற்றுவதில் எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது அமைச்சரவையில் உள்ள அத்தனை அமைச்சர்களையும் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைத்திருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் பரமவைரியான தி.மு.க.,வும், முதல்வரின் சவாலை எதிர்கொண்டுள்ள தே.மு.தி.க.,வும், சங்கரன்கோவிலில் செல்வாக்குள்ள ம.தி. மு.க.,வும் களமிறங்கிவிட்டன. வழக்கமாக மும்முனைப் போட்டிகளை மட்டுமே சந்தித்து வந்துள்ள தமிழகம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்கிறது.
அரசியல் களத்தை அவதானிப்பவர்களுக்கு ஒன்று உறுதியாகத் தெரியும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வென்று வந்துள்ளது, என்பது தான் அது. சங்கரன்கோவிலிலும் அதுவே சாத்தியமாகும் வாய்ப்பு அதிகம். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் இலக்கு வேறாக இருக்கிறது. எதிர்த்துப் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் டிபாசிட் கிடைக்கக் கூடாது என்பதே, அவரது உத்தரவு. மேலோட்டமாக பார்ப்பதற்கு அதீத நம்பிக்கை போல் தெரிந்தாலும், நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. முதல் விஷயம், கருப்பசாமியின் மரணத்தால் வந்துள்ள இடைத்தேர்தல் இது. கருப்பசாமிக்கு, தொகுதியில் எந்த கெட்ட பெயரும் கிடையாது. மின்வெட்டு பிரச்னை தவிர, தமிழக அரசு மீதும் பெரியளவில் அதிருப்தி உருவாகிவிடவில்லை. முக்கியமான விஷயம், எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. அதனால், அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும். இந்த மூன்று காரணங்களால், முதல்வரின் எண்ணம் ஈடேறக்கூடும். எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தால், அ.தி.மு.க.,வை விட அதிக ஓட்டு கிடைக்கலாம். மூன்றாகப் பிரிவதால், மூன்று பேருக்குமே டிபாசிட் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உண்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய எந்த சந்தர்ப்பமும் கண்ணில் தெரியவில்லை. காரணம், யார் நம்பர் 2 என நிரூபிப்பதில், மூன்று கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள போட்டி தான்.
தமிழகத்தில் அ.தி. மு.க.,வுக்கு மாற்றாக எப்போதுமே தி.மு.க., தான் இருந்து வந்துள்ளது. முதல் முறையாக, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. எனவே, இடைத்தேர்தலிலாவது இரண்டாமிடத்தைப் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் அந்தக் கட்சிக்கு இருக்கிறது. சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா, "திராணியிருந்தால் சங்கரன்கோவிலில் போட்டியிட்டுப் பாருங்கள்' என தே.மு.தி.க.,வுக்கு நேரடியாகவே சவால் விட்டார். இரு கட்சிகளும் எதிரும் புதிருமான பின்னர், எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. எனவே, குறிப்பிட்டு சொல்லும்படியான ஓட்டு பெற்றுக் காட்ட வேண்டிய கட்டாயம் தே.மு. தி.க.,வுக்கு இருக்கிறது. கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடாததால், மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,வுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதே தெரியாத நிலை. சங்கரன்கோவில் தொகுதி, அக்கட்சி பொதுச் செயலர் வைகோவின் சொந்தத் தொகுதியும் கூட. அதனால், அங்கு கவுரவமான ஓட்டுக்களைப் பெற்று, இரண்டாமிடத்தைப் பிடித்தால் தான், தொய்வற்ற அரசியலை தொடர்ந்து நடத்த ஏதுவாக இருக்கும். தி.மு.க., இரண்டாமிடம் பிடித்தால், சட்டசபை தேர்தலில் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ள முடியும். தே.மு.தி.க., இரண்டாமிடம் பிடித்தால், முதல்வரின் சவாலை எதிர்கொண்டு, மக்கள் நம்பிக்கையைப் பெற்ற பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் என கூறிக்கொள்ளலாம். ம.தி.மு.க., இரண்டாமிடம் பிடித்தால், இரண்டாவது இன்னிங்சைத் துவங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இப்படி, மூன்று கட்சிகளுமே இரண்டாமிடத்துக்குப் போட்டியிட்டாலும், மூன்று கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தல் இது.மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது, மார்ச் 21ல் தெரிந்துவிடும்!
-- Posted i n Dinamalar newspaper.
No comments:
Post a Comment