கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்த நாள் முதலே, அந்தக் கட்சியின் ""புகழ்'' பல்கிப்பெருகிக் கொண்டே இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவி விலகியதோடு பாஜகவைப் பிடித்த சாபம் விலகிவிடவில்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள் பாஜக-வின் மூன்று அமைச்சர்கள். அவையில் விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் நீலப்படம் பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து, மூன்று அமைச்சர்களும் பதவி விலகியிருக்கிறார்கள்.
அவையின் புனிதத்தைக் கெடுத்ததற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுவது சட்டப்படி சாத்தியம் இல்லை. ஆனால், விவாதம் இல்லாமல் விசாரணை நடத்திட பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்துவதில் நியாயம் இருக்கிறது.மூன்று பேரும் பதவி விலகி விட்டதால் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டியதில்லை என்கிறார் முதல்வர் சதானந்த கெüடா. ஆனால், இந்தப் பிரச்னையை விவாதிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பது நமது கருத்து.இந்த விவாதம் இரண்டு முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா என்பதையும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் சட்டப்பேரவையில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் என்ன என்பதையும் தீர்மானிக்கும் கருத்துக்களமாக இந்த விவாதம் அமையும் என்பது நிச்சயம். பேரவையில் முக்கிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது அவர் நீலப்படம் பார்த்தாரா, அல்லது ஒரு திரைப்படத்தின் "ஐட்டம் சாங்' பார்த்தாரா, அல்லது பக்தப் பிரகலாதா படமா, இல்லை தன் குழந்தையின் பிறந்தநாள் விடியோ காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாரா என்பதல்ல பிரச்னை. அவை நடவடிக்கையில் பங்கேற்காமல், மக்கள் பிரச்னை விவாதிக்கப்படும்போது அதில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்துத் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் எனும்போது, விவாதம் மிகவும் அவசியமாகிறது.மிக முக்கியமான மக்கள் பிரச்னை குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது ஓர் உறுப்பினர் அவையில் தூங்குகிறார். ஒருவர் எழுந்துபோய் கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஓர் உறுப்பினர் கையெழுத்துப் போட்டுவிட்டு, பேரவைக்குள் இன்னொரு உறுப்பினருடன் அரட்டை அடித்துக்கொண்டு, சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். இவையும்கூட, மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.மேற்சொன்னவை யாவும், ஓர் அவை நடவடிக்கையை பாதிக்காத, தனிப்பட்ட விவகாரம் என்று கருதப்படுமேயானால், இந்தக் காரணங்களுக்காக அந்த உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது என்று சொல்லப்படுமேயானால், அவையின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாதிப்பில்லாமல், அடுத்தவருக்கும் தொந்தரவு இல்லாமல் தன் செல்போனில் ஏதோ ஒரு படம் பார்ப்பதை எப்படி ஒழுங்கீனம் என்று கருத முடியும்? எப்படி தண்டிக்க முடியும்?ஆகவே, மக்கள் பிரச்னையில் பங்கேற்காமல், அவைக்குள் அலட்சியமாக எந்த வகையில் செயல்பட்டாலும், அந்த உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர் மீது எத்தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்ன தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் களத்தை அமைத்துக் கொடுப்பதாக கர்நாடக சட்டப்பேரவையின் இந்த விவாதம் அமைய வேண்டும். இதை சதானந்த கெüடா அனுமதிக்க முன்வர வேண்டும்.அடுத்ததாக, கர்நாடக சட்டப்பேரவையில் செல்போன் பேச்சு குறித்து முதல்வரும் பேரவைத் தலைவரும் தொடர்ந்து கடுமையாகவே சாடி வருகின்ற நிலையில், இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏ-க்களோ இந்த நீலப்படத்தை செல்போனின் சேமிப்பிலிருந்து மீட்டெடுத்துப் பார்க்கவில்லை. ஓர் அமைச்சருக்கு வந்த விடியோ குறுந்தகவல், மற்றொரு அமைச்சருக்குப் "பார்வர்டு' செய்யப்பட, அதை இரண்டு அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதோடு, அவையில் பல எம்எல்ஏ-க்களுக்கும் இதே குறுந்தகவல் வந்ததாகவும் அவர்களும் பார்த்ததாகவும் அந்த நேரத்தில் அவைக்குள் இருந்தவர்களால் கூறப்படுகிறது. அப்படியானால், இவர்களுக்கு இந்த நீலப்படம் எந்த செல்போனில் தொடங்கி, அவைக்குள் வந்து சேர்ந்தது என்பதைக் கண்டறிவது முக்கியம்.இதைக் கண்டறிய வேண்டுமானால், அந்த நேரத்தில் அவைக்குள் இருந்த அனைவருடைய செல்போன்களிலும் அந்த வேளையில் வந்த, தகவல், அழைப்பு, குறும்படத் தகவல் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான், பல உண்மைகள் தெரியவரும். சுமார் 15 நிமிடங்களில் அவை நடவடிக்கை முடிவுற இருந்த நேரத்தில் வந்த குறுந்தகவலை வேறு சிலரும் பார்த்துக்கொண்டிருக்க, ஏன் அமைச்சர்கள் மட்டும் கேமராவில் பிடி(க்கப்)பட்டார்கள் என்பது தொடங்கிப் பல உண்மைகள் அம்பலமாகும். இத்தகைய விரிவான விசாரணை எந்தெந்த பொருண்மைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனும் கருத்துருவாக்கத்துக்கு விரிவான விவாதம் தேவை. விவாதம் இல்லாமல் வெறுமனே 3 கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அறிக்கை அளிக்கும் என்பது சரியல்ல.இதை விவாதிப்பது சட்டப்பேரவைக்குக் களங்கம் என்று சதானந்த கெüடா கருதுவது நியாயம் என்றால், இதை மூடி வைக்க முயலுவதும் நியாயம் இல்லை. விவாதிக்கப்பட்டால்தான் புதிய விதிமுறைகள் உருவாகும்.சட்டப்பேரவை என்பது மக்களால் மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவும், மக்களுக்காகச் சட்டங்கள் இயற்றவும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட அவை. அவையின் உரிமையும், வானளாவிய அதிகாரமும் மக்கள் பணியில் தடையில்லாமல் செயல்படுவதற்காகத்தானே தவிர மக்கள் வரிப் பணத்தில் பொழுதுபோக்குவதற்காக அல்ல. இதை உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது!
No comments:
Post a Comment