Sunday, January 29, 2012

TNPSC & 14 Robbers

 இலட்சக்கணக்கான போட்டித்தேர்வு இளைஞர்களுக்கு TNPSC எனப்படும் த.நா.அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு கோயிலைப் போன்றது. அதன் புனிதம் தற்போது கெட்டுக்கிடக்கிறது. அரசுப் பணிகளுக்கு அலுவலர்களைத் தேர்வு செய்து தரவேண்டிய  தேர்வாணையம் பதவிகளை விற்க முனைந்ததே தற்போதைய கேடுகளுக்கு காரணம். வியாபாரிகளை எல்லாம்  தேர்வாணைய உறுப்பினர்களாக்கியதால் வந்த விளைவு இது. 




அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்கள்
         ஊடகங்களில் வந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளின் அடிப்படையில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இவை:
1.   மோட்டார் வாகன ஆய்வாளர் , பல் மருத்துவர் தேர்வுகளில் பணம் பெற்றுக்  கொண்டு தகுதியற்றவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது. 
2 .நேர்முகத்தேர்வுகளில் லட்சக்கணக்கில் பணம் தந்தவர்களுக்கு மட்டுமே முழு மதிப்பெண் வழங்கியது.
3 .பொது மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீடுகளில் தேர்ச்சி பெறாத, முன்னாள் ராணுவத்தினரல்லாத தேர்வாளர்களுக்கு , முன்னாள் ராணுவத்தினருக்கான  5  சதவீத ஒதுக்கீட்டின்கீழ் முறைகேடாகதேர்ச்சி வழங்கியது.
4 .குரூப்-1  முதன்மைத்தேர்வில் வேண்டிய(பணம் கொடுத்த) நபர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண் வழங்க செய்தது. 
5 .குரூப்-2  போன்ற சில கொள்குறி வகை வினா வடிவிலான எழுத்து தேர்வுகளில் தேர்வு நாளுக்கு முன்பாகவே Answer key -க்களை வெளியிட்டு  விற்று பணம் சம்பாதித்தது. 
6 .தேர்வே எழுதாத பலரை (குரூப்-2  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டபோது பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்கள்) தேர்ச்சி பெற வைத்தது.
7 .தேர்ச்சி பெறும் திறமை இல்லாத , கடைசி நேரத்தில் இவர்களை அணுகி பணம் கொடுத்த பலருக்கும் கம்ப்யூட்டரில், மதிப்பெண்ணில் திருத்தும் செய்து (உபயம் : திரு.சதீஷ் குமார், ASO ?) தேர்ச்சி பட்டியலில் சேர்த்தது.
8 .தேர்ச்சி பெற வைக்கிறேன் என்று கூறி சில மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தேர்ச்சியும் பெற வைக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் (நம்பிக்கை) மோசடி செய்தது. 
9 .IAS அந்தஸ்திலுள்ள TNPSC செயலாளரை பணி செய்ய விடாமல் முடக்கி வைத்தது.
10 .மேற்கண்ட இந்த முறைகேடுகளின் மூலமாக நேர்மையாக தேர்வெழுதிய, தகுதியுள்ள பல தேர்வர்களின் அரசுப் பணி வாய்ப்பை தட்டிப் பறித்தது.
அரிச்சந்திர முகமூடி
          இத்தனை குற்றச்சாட்டுகள் இப்போது. ஆனால் தனது மொத்த பணிக்காலத்தில் 99 சதவீத காலம் வரை நேர்மையின் சிகரமாக இருந்த திரு.அரங்க.செல்லமுத்து TNPSC.க்கு தலைவராக வந்த பிறகு அரக்க.செல்லமுத்துவாக மாறிப்போனது ஏன்? ஊழல் கண்காணிப்புத் துறையின் இரண்டாவது இன்னிங்சின் முக்கிய விக்கெட்டான இணைச் செயலாளர் ஜெரால்டு சில காலம் முன்புவரை ஊழலின் நீழல் கூட நெருங்க முடியாத நெருப்பாம். இப்போது மட்டும் என்ன பிரளயம் நடந்துவிட்டது, முறைகேடுகளை மொத்த குத்தகை எடுக்கும் அளவிற்கு ? லட்சக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை கேவலப்படுத்தி , அவர்தம் கனவுகளை காவு கொடுக்கும் இந்த களவாணிப் பயல்களுக்கு ஏன் இந்த அரிச்சந்திர முகமூடி?


தேர்ச்சி பெற்றோர் கதி என்ன ?
                          இத்தனை முறைகேடுகளுக்கு நடுவிலும் போராடி குரூப்-2 , மற்றும் VAO தேர்வுகளில்தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 5112 பேரின் நிலைதான் பரிதாபம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை. இவர்களில் 90  சதவீதம் பேர் நேர்மையான முறையில் தேர்வெழுதி திறமையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களே. 10  சதவீத முறைகேடுகள் இருந்திருக்கலாம். அதற்காக 90  சதவீதம் பேர் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?   10  சதவீத போலிகளை கண்காணிப்புத் துறை கண்டுபிடிக்கட்டும்,  களை எடுக்கட்டும் .  அவர்கள் பணியில் சேர்ந்திருந்தால் கூட  கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டும்.  ஆனால் அனைத்து தில்லுமுல்லுகளையும் தாண்டி THRILL வெற்றி பெற்றிருககும் பத்தரை மாற்று தங்கங்களை ஏன் பலி கொடுக்கவேண்டும்? அனாவசிய காலதாமதத்தால் அவர்களை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும்? தமிழக அரசும், செயலாளரும் இது குறித்து நல்லதொரு முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம். (முடிவு - சென்னை உயர்நீதிமன்ற பொது நல வழக்கு W.P. NO .15603/2011.ன் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது.)
மறைமுக வேலை நியமனத் தடையா?           
                    ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை அனைவரும் ஆதரிக்கின்றார்கள் . அவை ஒரு நீண்ட கால நடவடிக்கைதான். மலையளவு ஊழல் புரிந்தவர்களின் திருவிளையாடல்களை ஒரே இரவில் அம்பலப்படுத்தி விட முடியாதுதான். அம்பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறட்டும். அதே நேரம் இந்த நீண்ட கால நடவடிக்கைகளால் களத்தில் நிற்கும் போட்டி தேர்வாளர்கள் நம்பிக்கை இழக்க இடம் தரக்கூடாது அல்லவா? ஆம் . அது அவர்களின் கனவு, நம்பிக்கை, எதிர்காலம். அவற்றை சிதைக்கும் உரிமை யாருக்கும் இல்லை.  இன்றைய நிலையில் அவர்கள் மனதில் ஓர் அச்சம் . இனி புதிய தேர்வு அறிவிப்புகள் வெளிவருமா? எழுதியுள்ள தேர்வுகளின் முடிவுகள் தெரியவருமா? இது ஒரு மறைமுக வேலை நியமன தடைக்கு அச்சாரமா? என்ன ஆகும் எதிர்காலம்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு என்ன விடை?  தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் இதை ஒரு சிறப்பினமாக கருதி வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி TNPSC நிர்வாகத்தை தூய்மைப்படுத்தி புதிய தேர்வு அறிவிப்புகளை விரைவில் வெளியிட்டு இளைஞர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவேண்டும்.  நல்லதே நடக்கும் என்றுதான் நாமும் நம்புகிறோம். 
நீதியரசர்கள் தரும் நம்பிக்கை.
            இப்பிரச்சினை குறித்த மேலே குறிப்பிட்ட வழக்கு விசாரணையின் முதல் நாளில் மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் இவ்வாறு சொன்னார். "Prima  facie  of  this  case  seems  to  be  very  serious , the  court  will  monitor  the  entire  investigation  conducted by  DVAC '' (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு).   வரப்போகும் தீர்ப்பும் வரலாற்றில் நிலை பெறட்டும். பஞ்சாப் -ஹரியானாவுக்குப் பிறகு இங்கும் ஒரு திருப்பம் தரட்டும். ஒரு பெருமழைக்குப்பின்னர் சுத்தமாகும் கூவத்தைப்போல அதன் கரையிலிருக்கும் TNPSC -யும் சுத்தப்படட்டும்.  நம்பிக்கையோடு காத்திருப்போம்.....

No comments:

Post a Comment