Sunday, January 29, 2012

TNPSC New Chairman


TNPSC CHAIRMAN - சிறப்பு பேட்டி

தேர்வாணையத்தில் தவறு நிகழ விடமாட்டேன்: ஆர்.நடராஜ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இனி எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அதன் தலைவரும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நடராஜ் தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக  அவர் பொறுப்பேற்றார். இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  

தமிழக அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்தப் பணியை அளித்துள்ளது. அரசுப் பணி என்பது தெய்விகப் பணியாகும். அது ஒரு கொடை. அத்தகைய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதை திறமையாகப் பயன்படுத்துவேன்.  அரசுப் பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாகச் செயல்படுவது அவசியம். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசுப் பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன்.  நாணயம் பெறாத சேவை: முதலில் செய்யப் போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து இருக்கிறது. அந்தப் புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.  
கேமரா மூலம் கண்காணிப்பு: ஒவ்வொரு தேர்வு அல்லது முதல் நிலைத் தேர்வு முடிந்தவுடன், அந்தத் தேர்வுக்கு உரிய விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் குறித்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் கருத்துகள் கேட்கப்படும். தேர்வர்களால் ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அந்த விடைகள் நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அந்தக் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைகள் ஏழு நாள்களுக்குள் வெளியிடப்படும்.  10-ம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளைப் போன்று, விண்ணப்பதாரர்கள் தங்களது திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் அறைகளிலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும். நேர்முகத் தேர்வின்போது சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் விடியோ காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.  
பாடத்திட்டம்-தேர்வு தேதி: 
அனைத்துத் தேர்வுகளுக்கும் உரிய தேர்வுமுறை, பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்வுகள், அந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள உத்தேச தேதியையும் உள்ளடக்கிய தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.  அரசுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்தறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.  
15 நாட்களில் புதுப்பிப்பு: 
 தேர்வாணையத்தின் இணையதளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல்வேறு தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாட முறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.  தவறு நிகழாது: லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவோம். நல்ல முறையில் படித்து நேர்மையாகத் தேர்வு எழுதினால் அரசுப் பணயில் சேர வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவோம். தேர்வாணையத்தில் எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்றார் நடராஜ். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் உடனிருந்தார்.    
தேர்வு முடிவுகள் எப்போது? 
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.நடராஜ் பதிலளித்துள்ளார்.  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2 தேர்வுகள் முக்கியமானதாகும். இரண்டு தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 வெற்றியாளர்களுக்குப் பணி நியமன உத்தரவும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு மாவட்ட அளவில் பணி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.  இந்தப் பணிகள் அனைத்தும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த உத்தரவை டி.என்.பி.எஸ்.சி.க்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுப்பியுள்ளது. ஆனால், பணி நியமன உத்தரவை ஆறு வார காலத்துக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வாணையத் தலைவர் நடராஜிடம் கேட்டபோது, ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் குறித்தும், இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பற்றியும் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அது குறித்து தமிழக அரசுடன் விவாதித்த பிறகே பணி நியமன உத்தரவுகள் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
 தனி குறியீடு...  
தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளை எழுதுவோருக்கு குறியீடு வழங்கப்படும் என தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியது: தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் தேர்வர்களின் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது. எனவே, அவர்கள் ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கென தனி குறியீடு வழங்கப்படும். அடுத்த முறை வேறொரு பதவிக்கு நடைபெறும் தேர்வை எழுத அந்தக் குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று நடராஜ் தெரிவித்தார்.   

* டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் மற்றும் இப்போதைய உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒத்துழைப்பு இனி எந்த வகையில் இருக்கும்? எனக் கேட்டதற்கு ..
அவர்கள் கேட்டால், நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம்.

* தேர்வாணையத்தில், தற்காலிக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். பல முறைகேடுகளுக்கு அவர்களும் உடந்தை என கூறப்படுகிறது.                                                                                                                  
அவர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவரா? 
பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அவைகளை எல்லாம் கையாள வேண்டுமெனில், கூடுதலாக பணியாளர்கள் தேவை. அதனால், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment